உலக இலக்கிய தொடர். பாகம் 01-  டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம்.

“இன்றும் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்க்கை மூலம் அவனே கண்டுபிடிக்கும் நுண்மைகள் கொண்டதாகவே இந்நாவல் உள்ளது.”

என்ற ஜெயமோகனின் அன்னா கரீனினா பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றேன்.

(flickr.com)

நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும் எங்கோ நடக்கின்ற குண்டுவெடிப்பும் தூரத்தில் உதிர்கின்ற இலைகளும் எல்லாமுமே ஒரு வகையில் எம்மக்குள் பாதிப்புதான். ஒவ்வொரு பாதிப்பிலும் ஒவ்வொரு விதமாக நாங்கள் எங்களை சரிப்படுத்திக்கொண்டு அடுத்த பாதிப்பை நோக்கி செல்கிறோம். இதுதான் புறச் செயற்பாடு. இவ்வளவோடு எதுவும் முடிந்துவிட்டதென்பதில்லை.

ஒவ்வொரு புறச் செயற்பாடும் எம்முள் விதைக்கின்ற விதைகள்தான் மிக முக்கியமானவை. பாதைகளில் தடைகளை மட்டுமே புறச்செயற்பாடு காட்டும். அவ்வளவு தான் அதன் வலிமை. உண்மையில் நமது வாழ்க்கைக்கு பாதைகளே கிடையாதே. யார் சென்ற பாதையிலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. முன்னோடிகளா? அவர்களின் பாதையில் நாங்கள் செல்லப்போவது இல்லை. அவர்களின் பாதைகளை கவனித்து பயின்று பின்னர் எங்கள் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இது தான் யதார்த்தம். இந்த வெற்று வெளியில் பாதைகளை உருவாக்கிக் கொள்ள கருவிகள்தான் விதைகள். புறச்செயற்பாடு விதைத்த விதைகள். எல்லோரது வாழ்விலும் எண்ணற்ற விதைகளை விதைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் ஒரு புது விதை போடப்படுகின்றது; நேற்று போட்ட விதை துளிர்கின்றது; எப்போதோ போட்ட விதை விருட்சமாகின்றது; நெடுங்காலம் முதல் போட்டவை உதிர்கின்றன. இந்த செயல் வட்டம்தான் அகச்செயற்பாட்டு வாழ்க்கை.

இந்த விதைகளை விதைப்பதில் தான் அன்னா கரீனினா என்ற நாவல் வடிவம் பெறுகின்றது.

டால்ஸ்டாயும் அன்னா கரீனினாவும்.

லியோ டால்ஸ்டாய் (mosaicmagazine.com)

டால்ஸ்டாயின் மிக உன்னதமான நாவலான போரும் அமைதிக்கும் பிறகு அவர் எழுதிய இன்னொரு முக்கிய இலக்கியம்தான் அன்னா கரீனினா. குடும்ப வாழ்வின் திருப்பங்கள், அவற்றின் பிறழ்வுகள், ஒரு பெண்ணின் உளநிலை பிரச்சனைகள், காதல், சராசரி முடிவுகள் என்று முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை தழுவியே எழுதப்பட்ட நாவல். பொதுவாக நிலவுகின்ற  டோல்ஸ்டயிடம் இருந்து வர்ணனைகள் எடுத்து விட்டால் மீதம் இருப்பது உப்பு சப்பு இல்லாத கருத்துகளே என்ற சாடலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் எழுதபட்ட நாவல். டால்ஸ்டாயின் புனைவுகள் என்பதை மீறி டால்ஸ்டாய் தனது வாழ்கையை பதிவிடும் எழுத்துகளாக அன்னா கரீனினாவை எழுதியிருகின்றார். பொதுவாக டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும் அவரது புனைவுகளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்னே கரீனினாவில் வருகின்ற லெவின் என்ற பாத்திரத்தை முற்று முழுதாக தன்னை உருவகப் படுத்தியே உருவாகியிருகின்றார்.

இந்த நாவல் ‘The Russian Messenger’ என்ற பத்திரிகையில் 1873 இலிருந்து 1877 வரையான நான்கு ஆண்டுகள் தொடராக வெளிவந்திருக்கிறது. அதையே பின்னர் கோர்த்து நூலாக்கியிருகின்றனர். இந்த நாவல் மொத்தமாக இருபத்தொன்பது மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருகின்றது. அன்னே கரீனினா நாவல் என்பதை தாண்டி ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் திரைப்படமாகவும் வெளிவந்திருகின்றது. Holleywood இல் மாத்திரம் நான்கு முறை திரைப்படமாக்கபட்டிருகின்றது. அன்னே கரீனினாவின் பின்னர் அன்றைய ரஸ்சிய மக்களால் புஸ்கினுக்கு அடுத்த மிக பெரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த நாவல் பிரெஞ்சு மொழியிலும் சம காலத்திலேயே சமாந்திரமாக எழுதப்பட்டது.

அன்னே கரீனினா எழுதுவதற்கான பின்னணி.

(pinimg.com)

டால்ஸ்டாய் பத்திரிகை ஒன்றில் “அன்னே ஸ்டேப்நோவா“ என்ற குடும்ப பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியை வாசிக்கின்றார். இந்த நிகழ்வு அன்றைய கால கட்டத்தில் அசாதாரணமானது. அதனால் டால்ஸ்டாய் இந்த நிகழ்வின் மீது கரிசனையும் அதிக கவனமும் செலுத்தி அதன் பின்னணியை ஆராய தொடங்குகின்றார். பிணவறையில் தலை மட்டும் தெளிவாக தெரியக்கூடிய உடலெல்லாம் சிதறிப்போன பெண்ணின் நிலையை கண்டு வேதனை அடைகிறார். அவளை பற்றி தேடியதில் அவளின் இறப்பிற்கு கள்ள காதல்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கிறார். அதைவிட மேலாக அந்த பெண் புஷ்கினின் மகள் என்ற உறுதிப்படுத்தபடாத செய்தியும் உண்டு. இவையெல்லாம் தான் டால்ஸ்டாயை அன்னே கரீனினா எழுத தூண்டியிருகிறது.

கதைச்சுருக்கம். – ஜெயமோகனின் “இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி” என்ற பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.

அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’ தன் சகோதரன் ஸ்டீவின் மணவாழ்க்கையின் சிக்கல்களை தீர்ப்பதற்காக அன்னா கரீனினா பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மாஸ்கோவிற்கு வருகிறாள். ஆனால் வந்தவள் தன்னையறியாமலேயே விரான்ஸ்கியுடன் காதலில் விழுகிறாள்.

கரீனின் என்ற கறாரான அதிகாரியின் மனைவி அன்னா. அவளுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால் காதலின் வலிமை அவளை விரான்ஸ்கியை நோக்கி இழுக்கிறது. குற்றவுணர்வு கொண்டு அவள் அதிலிருந்து விலக முயலும்தோறும் குற்றவுணர்ச்சியின் தீவிரத்தாலேயே அந்தக்காதல் மேலும் உக்கிரமானதாக ஆகிறது. குழந்தையையும் கணவனையும் விட்டுவிட்டு விரான்ஸ்கியுடன் ஓடிப்போகிறாள். அவனுடன் குறுகியகால காதல் கொண்டாட்டம்

அதன்பின் அந்தக் காதலுக்கு அடியில் மூடி வைத்திருந்த ஒவ்வொன்றாக வெளியே தலைநீட்ட ஆரம்பிக்கின்றன. விரான்ஸ்கிக்காக தான் இழந்தவை மிக அதிகம் என்பதனாலேயே விரான்ஸ்கி தன் மேல் பூரணமான அன்பு செலுத்தவேண்டும் என அன்னா எதிர்பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு விரான்ஸ்கியை மூச்சுத்திணறச் செய்கிறது. மகனைப்பிரிந்த குற்ற உணர்ச்சியால் அன்னா வதைபடுகிறாள்.

ஒரு நாடக அரங்கில் உயர்குடிப்பெண்கள் — அவர்களில் பெரும்பாலானவர்கள் ரகசியமான கெட்ட நடத்தை கொண்டவர்கள் — அன்னா தங்களுடன் அமரக்கூடாது, அவள் ஒழுக்கம் கெட்டவள் என்கிறார்கள் சமூகத்தின் முன் பாவியாக நிற்பதன் விளைவாக வீம்பும் கசப்பும் கொண்டவளாகிறாள் அன்னா. அவளுடைய இனிமையும் நாசூக்கும் இல்லாமலாகி சிடுசிடுப்பான, உள்வாங்கிய பெண்ணாக ஆகிறாள். அவளிடமிருந்து விரான்ஸ்கியின் மனம் விலக ஆரம்பிக்கிறது.

அன்னாவுக்கு விரான்ஸ்கியில் ஆன்னி என்ற இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவள் பிரசவத்தில் மாண்டுபோகக்கூடும் என்ற நிலை இருந்தபோது கரீனின் அவளைப் பார்க்க வருகிறான். அவளது நோய்ப்படுக்கையின் முன்னால் வைத்து அவன் விரான்ஸ்கியை மன்னிக்கிறான். கணவனின் இன்னொரு முகத்தை அன்னா பார்க்கிறாள். மனித உறவுகளை எல்லாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்க அவளால் முடிகிறது. குற்றவுணர்ச்சி கொண்ட விரான்ஸ்கி தற்கொலைக்கு முயல்கிறான்.

ஆன்மீகமாக அன்னாவின் வீழ்ச்சியை பல படிகளாகச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். அன்னா விரான்ஸ்கியை தனக்கு ஓர் உணர்ச்சியடிமையாக இருக்க வைக்க முயல்கிறாள். அப்படி அவன் முயலும்தோறும் அவனை அவள் ஐயப்படுகிறாள், அவனை துன்புறுத்துகிறாள். தன்னுடைய ஈர்ப்பு குறைகிறதோ என்ற ஐயம் காரணமாக அவள் பிற இளம் ஆண்களை கவர முயல்கிறாள். அந்த கவர்ச்சி மூலம் தன்னைத் தனக்கே நிரூபித்துக்கொள்கிறாள்.

விளைவாக அவள் மெல்ல மெல்ல மனம் நைந்தவளாக உச்சஉணர்ச்சிநிலைகளும் பதற்றங்களும் கொண்டவளாக ஆகிறாள். கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையே அலைகிறாள். தூங்குவதற்கு அவள் மார்பின் பயன்படுத்துவதும் அதற்குக் காரணமாகிறது

கடைசியில் அனைத்திலும் நம்பிக்கை இழந்த அன்னா தன்னை வந்து பார்க்கும்படி விரான்ஸ்கிக்கு ஒரு தந்தி கொடுத்துவிட்டு ரயில் நிலையம் செல்கிறாள். ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். ரயில் கிளம்பும்போது சட்டென்று உருவான ஒரு நிராசையால் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் பாய்ந்து உயிர்விடுகிறாள்.

ஜெயமோகன்

நாவலின் சிறப்பு பக்கங்கள்

அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார். (thefilmcricket.files.wordpress.com)

டால்ஸ்டாய் குடும்பம் என்ற சட்டகத்தில் இருந்து சமூகம் என்ற சட்டகத்திற்கு எவ்வாறு சிந்தனைகள் கடத்தபடுகின்றன என்பதை விவரித்திருப்பார். கூட்டுபண்ணையை உருவாக்குதல் பற்றியும் விவசாயத்தில் ஓடியிருக்கின்ற பழமையை இல்லாமல் ஒழித்து புதுமையான விவசாய புரட்சி செய்தல் பற்றியும் சாதாரண வாழ்கை தரத்திலிருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயத்திவிடுவது பற்றியும் மிக செறிவாக வாதிக்கின்றார்.

நாவல் சில ஆழமான குறியீடுகளை கொண்டிருகின்றது. அதில் முக்கியமானதாக புகைவண்டி காட்டபடுகின்றது. ஒரு புகைவண்டியின் அடிப்படை நோக்கம் ஒரு பயணியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலே. இதை மிக நுட்பமாக டால்ஸ்டாய் அன்னாவின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்றார். அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார்.

அதைவிட ஒரு வாழ்வின் மிக கொடூரமான எல்லா மறையான விடயத்திற்கும் குறியீடாக புகைவண்டியை பயன்படுத்தியிருக்கலாம். அன்னாவின் வாழ்கையை அப்படியே வந்து அடித்து சிதிலமாகுகின்ற மறையான விடயங்களை புகைவண்டியின் மூலம் குறியீடாக்கியிருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

கதையில் வருகின்ற முக்கிய வசனங்கள்.

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

In that brief glance Vronsky had time to notice the restrained animation that played over her face and fluttered between her shining eyes and the barely noticeable smile that curved her red lips. It was as if a surplus of something so overflowed her being that it expressed itself beyond her will, now in the brightness of her glance, now in her smile.

“Respect was invented to cover the empty place where love should be. But if you don’t love me, it would be better and more honest to say so.”

“. . . [M]y life now, my whole life, regardless of all that may happen to me, every minute of it, is not only not meaningless, as it was before, but has the unquestionable meaning of the good which it is in my power to put into it!”

அன்னா கரீனினாவும் விவாதங்களும்.

மிக எளிமையாக முடிக்கப்பட்ட ஒரு இறப்பிலிருந்து வாதங்களை அன்றைய அறிவார்ந்த சமூகத்தினர் அன்னாவின் மீது எழுப்பினார்கள். அன்றைய எல்லா அவைகளிலும் அன்னாவின் முடிவு சரியானதா பிழையானதா என்ற வாதம் எழுந்துகொண்டே இருந்தது. இன்றும் எழுந்தவண்ணமே இருகின்றது. வேறுபட்ட மனோபாவங்களையும் பல்வேறு சூழ்நிலை சிக்கல்களையும் எதிர்நோக்குகின்ற சாதாரண ஒரு பெண்ணின் முடிவு தற்கொலை தானா? என்ற காலத்தின் கேள்வியோடு வாதங்கள் தொடர்ந்தவண்ணமே இருகின்றன.

ஒரு உன்னத இலக்கிய படைப்பு காலத்தை மீறியது. காலக்கணிப்பு செய்யமுடியாத அர்த்தங்களை சுமப்பது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவும் காலத்தை கடந்த ஒரு உன்னத படைப்பு.

முழு நாவல் – ஆங்கிலத்தில்

உசாத்துணைகள்

உலக இலக்கிய பேருரைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்

ஜெயமோகன்

Spark Notes

 

Related Articles

Exit mobile version