தெற்காசியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் குடிநீர், உணவு போன்றவற்றை குளிர்ந்த வெப்பநிலையில் பேணுவதற்கு களிமட்பாண்டங்களை பயன்படுத்தும் வழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழர்களிடையே நீரை மண் கலங்களில் சேமித்து வைக்கும் மரபு மிகவும் தொன்மையானது. கீழடி முதலான வரலாற்று தளங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாயிரமாண்டு பழமையான உறை கிணறுகள் இதற்கு சான்றாக அமைகின்றன. தற்போது இந்த ஆயிரமாண்டு பழமையான பழக்கம் சூழலை பாதுகாக்கும் புதியதொரு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
கிமு 2500ல் பழைய எகிப்து இராச்சியத்தின் சுவரோவியங்கள் நீர் ஆவியாதல் மூலம் குளிரூட்டப்படும் குடுவைகள் வட ஆப்பிரிக்காவிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஜீயர் என்று அழைக்கப்பட்ட இந்த பானைகள் நவீன மின் குளிர்சாதன பெட்டிகளின் வருகைக்குப் பிறகு மெல்ல புழக்கத்தில் இருந்து மறைந்தன.
ஃஜீர் என தற்போது புதிய நாமம் எடுத்திருக்கும் இந்த களிமண் பானை குளிர்விப்பான் மின்சாரத்தைப் பயன்படுத்தாது நீராவியின் ஈரப்பதத்தை மட்டும் கொண்டு பொருட்களை குளிரூட்டும் குளிர்பதன சாதனமாகும். ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்படும் இரு பானைகளைக் கொண்டதாக இச்சாதனம் அமையும். வெளிப்புற களிமண் பானையை பல நுண்ணிய துளைகளை கொண்டதாக அமையும்.
அதனுள்ளே உட்புறம் மெழுக்கப்பட்ட அளவில் சிறிய பானை வைக்கப்படும்.இரு பானைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஈரமான மண் நிரப்பப்படும். வெளிப்புற பானையின் வழியாக கசியும் திரவம் ஆவியாவதால் உள் பானையின் வெப்ப நிலை படிப்படியாகக் குறையும். எந்தவொரு பொருளையும் குளிர்விக்கும் இந்த சாதானத்துக்கு தேவையானது ஒப்பீட்டளவில் வறண்ட காற்று மற்றும் நீர் ஆதாரம் மட்டுமே.