மாட்டுத்தாவணியின் வரலாறு

அன்று அந்த வீதியோர இட்லி கடையில் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று பாத்திமா காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் இறங்கியபோது நேரம் இரவு எட்டரை ஆகியிருக்கும். அன்று எனது பிறந்தநாள் வேறு, சாப்பாடு, ஸ்வீட் என எதையும் விட்டுவிடக்கூடாது என்று தம்பி ராஜாராம் மிக கவனமாக இருந்தான். “நேரம் வேற ஆகுது, ஹோட்டலுக்கு திரும்பி போக வாகனம் இருக்குமோ என்னவோ” என்று அங்கலாய்த்த என்னை, “அக்கா, இது மதுரை! 24 மணிநேரமும் அரசு போக்குவரத்து இருக்கும். தூங்கா நகரம்கா இது!!” என்று நம்பிக்கை கூறினான்.

 நாங்கள் உணவு உண்டு கொண்டிருந்த தருவாயில் தம்பி ராஜாராம் மெல்ல என் மனநிலையை கவனித்துவிட்டு தொடங்கினான், “நாளக்கி காலைல மேலூர்ல இருந்து நாங்க வந்து உங்கள சந்திக்க எப்பிடியும் ஏழு மணி ஆயிடும். அதுவர காத்திருந்தா, பூ மார்கெட் பாக்க முடியாதுக்கா… நீங்க தனியா சமாளிச்சுக்குவீங்களா?” என்று யோசனை கலந்த தொனியில் கேட்க, தமிழ் நாடு., உலக நாகரிகத்தில் தொன்மையான நகரம் இக்கூடல் நகர்., இங்க தனியா போறது பத்தி பயப்படறதே பாவம். “அதெல்லாம் ஒன்னும் பயமில்ல, நான் பாத்துக்குறன்” என்று தைரியம் கூறி, ராஜாராம் வாங்கிக் கொடுத்த மதுரை அல்வாவோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டோம். 

அடுத்த நாள் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கே ஆயத்தமாகி ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டில் முதல் முறையாக தனியாக எனது நாளைத் தொடங்கி ‘மாட்டுத் தாவணி’ நோக்கி பயணமானேன். ஆட்டோவில் செல்கையில் ராஜாராம் முந்தைய இரவு “இது தூங்காநகரம்கா” என்று கூறியது உறைத்தது. எவ்வளவு சுறுசுறுப்பான மக்கள்.

மாட்டுத்தாவணி

உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரையின் சிறப்புக்களை பட்டியலிட்டு விளக்கி முடிப்பது கடினம். தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று பெருமையாக அழைக்கக்கூடிய தமிழைச் சங்கம் வைத்து வளர்த்த மதுரை அல்லவா இது. கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகும் மதுரையின் மறக்க முடியாத இன்னுமொரு அழகுக் காட்சியை காணவே நான் மாட்டுத்தாவணி நோக்கிச் சென்றேன்.

மாட்டுத்தாவணி, பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறதே! மாட்டுக்கு தாவணியா? இப்படி நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் வரலாறோ, “தாவாணி” என்ற பெயரே, இப்படித் தாவணியாக மருவியிருக்கிறது என்கிறது. மாடுகளை வாங்கி விற்க, பல்வேறு தேவைகளுக்காக கால்நடைகளை கொண்டுவந்து புழங்க, கால்நடைகளுக்கு தண்ணீர் உணவு புகட்ட, உபயோகப்பட்ட இடம் ஆதலாலேயே இந்த இடத்திற்கு மாட்டுத் தாவணி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது இந்த இடம் ஒரு பெரிய பேருந்து நிலையத்தின் காரணத்தினால் பிரபலம் அடைந்திருக்கிறது. மதுரையின் பெரியார் பேருந்து நிலையம் இருக்கின்ற பொழுது, மதுரையின் புறநகர்ப் பகுதியில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையம் ஒன்று இருப்பது இத்தூங்கா நகரத்திற்கு அத்தியவசியான ஒன்றுதான். இதனால்தான், போக்குவரத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முந்தைய நாள் ராஜாராம் சொன்னான் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க.

Mattuthavani (Pic: thehindu)

மாட்டுத்தாவணி பூ மார்கெட்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து வடகிழக்கே வைகையாற்றைக் கடந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தாண்டி சென்று ஒரிடத்தில் நின்றது ஆட்டோ. “இதுதான் பாப்பா பூ மார்கெட்” என்று சொல்லி நான் திரும்பி வரும்வரை காத்திருந்து மறுபடியும் என்னை விடுதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார், அந்த அக்கறையான ஆட்டோக்காரர்.

நான் இறங்கிய இடத்திலேயே ஆளுயர மாலைகள் அணிவகுக்க ஒரு பூக்கடை இருந்ததைப் பார்த்து நிஜமாகவே நான் மிரண்டு போனேன்! ஆமாங்க, இலங்கையில் நான் பார்த்த பூக்கடைகளில் மிஞ்சி மிஞ்சி ஒரு இருபது முப்பது சரங்களில் பூக்கள் தொங்கும். அதையே நான் அப்படி வாய்பிளந்து பார்த்திருக்கிறேன். பாவம் நான் சேர்ந்தாற்போல இவ்வளவு மாலைகளை, இத்தனை வடிவங்களில் கண்டதும் இருந்த இரண்டே கண்களால் அந்த அழகை ரசித்து முடிக்க முடியாமல் திக்குமுக்காடுகையில், “நீங்க வெளியூரா?” என்று அந்தக் கடையின் நடத்துனர் கேட்டார். பின்ன என்ன கேட்க மாட்டாரா? ஒரு பூ மார்க்கெட்ட பார்த்ததுக்கே அவதார் 2 வ ரிலீஸ்க்கு முன்னாடி பார்த்த ரியாக்சம் கொடுத்தா? ஆமாம் என்று நான் தலையாட்டுவதற்குள், இதென்ன பிரமாதம்! உள்ள போயி பாரும்மா அங்கதான் மார்கெட் இருக்கு என்று சொன்னார் அவர். ஆர்வம் பொங்க நான் அதுவரை அறிந்திராத பூ மார்க்கெட்டினுள் சென்றேன்.

மதுரை மல்லி” என்ற வாசகத்தை கேள்விப்படாதோர் இவ்வுலகில் உளரோ!? சந்தையின் முகப்பிலேயே பத்துப் பதினைந்து ஆண்கள், பெண்கள் தங்களது குட்டிக் குட்டிக் கடைகளில் மல்லிகை மலர்களைக் கோர்த்துக் கொண்டிருந்தார்கள். “பூ வாங்கிக்க கண்ணு” என்று அவர்கள் சொன்ன வாஞ்சைக்காகவே ஒரு முழம் வாங்கிக்கொண்டேன். தனியே மல்லிகை, இடையிடையே பச்சை நிறத்தில் இலைகள், இன்னும் சிலவற்றில் கனகாம்பரம், அலறி என பல்வேறு ஒழுங்கமைப்புக்களில் அவர்கள் மலர்களைக் கோர்க்கின்ற வேகம், பாண்டித்தியம், அவர்களின் விரல்கள் நாரோடு செய்கின்ற நடனம் இவையெல்லாம் உட்கார்ந்து நேரமெடுத்து ரசிக்கவேண்டிய கலை.  

ஒரு நாளைக்கு சுமார் பத்து டன் பூக்கள் இங்கே விற்கப்படுகிறதாம். அதிகாலையில் இருந்து ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து பூக்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவ்வளவு பெரிய பூக்களின் அணிவகுப்பு காண்பதற்கரிய கண்கொள்ளாக் காட்சி. ஒரு வீதி முழுவதும் பூக்கள் கொட்டிக்கிடக்க, சுறுசுறுப்பாக நடைபெறும் வியாபாரம் அதிகாலை ஆனந்தம். “தமிழ் மணக்கும் மண்ணில் பூ மணக்கும் காலையை அனுபவிக்க அன்று எனக்குக் கொடுத்துவைத்திருந்தது.

Rose (Pic: Writer Herself)

எங்கு பூத்து எங்கு செல்கிறது?

மதுரை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் போன்ற பிரதான பிரதேசங்களில் இருந்து, இப்பூச்சந்தைக்கு பூக்கள் கொண்டுவரப்படுகின்றன. நாள்தோறும் இத்தனை பூக்கள் பறிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்லப்படுகிறது என்றால் இதற்குப் பின்னால்  எவ்வளவு உழைப்பு இருக்கின்றது என்பதை நினைக்க நினைக்க வியப்பே எஞ்சுகிறது. இன்னொரு பக்கம் ஒவ்வொரு நாளும் இவ்வளவு பூக்கள் எப்படி விற்றுத் தீர்கின்றன என்ற கேள்வியும் எழாமலில்லை. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில், வணக்க வழிபாட்டில், விழாக்களில், சடங்குகளில் இன்னும் பல்வேறு நடைமுறையில் பூக்களின் பங்களிப்பு இன்றியமையாததாய் இருப்பதே இப்பூ மார்கெட்டின் மார்க்கெட்டுக்கு காரணம். அதுமட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் பூக்களின் விற்பனை சாதரான நாட்களை விட அதிகம் என்கின்றனர் வியாபாரிகள். மதுரை நகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் விளம்பரங்கள் விட்டுவைக்காத சந்து, பொந்து, மதிற்சுவர்கள், கட் அவுட்டுகள் என பார்த்து வியந்த பிறகு, அவர்கள் சொன்ன விடயத்தை ஆமோதிக்கவேண்டியதாய் போயிற்று எனக்கு.

பெரிய பெரிய கோணிப் பைகளில் நிரம்பி வழிகின்ற செம்மஞ்சள் நிற சாமந்திப் பூக்கள் கொள்ளை அழகு. எண்ணி எண்ணி அலுத்துப்போகும் அளவுக்கு ஏராளமான பைகளில் கும்பல் கும்பலாக நிறைந்து வழிந்த மஞ்சள் மலர்கள் அவ்வீதியையே மங்களகரமாக்கியிருந்தது.

ரோஜா மலர்களில் எல்லோருக்கும் காதல் உண்டு. ரோஜாச் செடிகளை வளர்த்துப் பராமரிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. ஒன்று இரண்டு பூக்களைக் கொண்ட செடிகளையே அவ்வளவு ஆர்வமாக பராமரிக்கும் எனக்கு கோடிக்கணக்கான பூக்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததை பார்த்து மாளவில்லை. சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், குங்குமம் என பல்வேறு நிறங்களின் ஜாலமாக காட்ச்சியளித்த ரோஜா மலர்களை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது.

காலமாற்றத்தில் மேற்கத்திய கலாசார ஊடுருவல் இங்கு ரோஜாப்பூக்களின் கிராக்கியை உயர்த்தி வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இப்போதெல்லாம் பூச்செண்டுகள் கொடுப்பதுதானே வழக்கம்! அதற்காக ரோஜா மலர்கள் அதிக கேள்வியைக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர். இருந்தாலும், “மதுரை மல்லி” என்று தனித்துவமாக அழைக்கப்படும் மல்லிகைப் பூவுக்கு தனித்துவமான வாசம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது! மதுரை மண்ணின் தனித்துவம் மல்லிகைப் பூவிலும் தொனிக்கிறது போலும்.

மல்லிகை, அரளி, கனகாம்பரம், ரோஜா, சாமந்தி, என பூக்களோடு சேர்ந்து, அறுகம்புல் மற்றும் மாலை கட்டுவதற்குண்டான நார் வகைகள் என பூக்களோடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் அங்கே ஒரே இடத்தில் கிடைக்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என புகைப்படம் எடுக்கத் தடுமாறிய எனக்கு, தாங்கள் கடைகளையும், அங்கிருந்த பூக்களின் காட்சியையும் பதிவுசெய்துகொள்ள பூ வியாபாரிகள் மிகவும் ஒத்துழைப்பு வழங்கினர். இலங்கையில் இருந்து இப்பூச்சந்தையை தேடி வந்த எனக்கு கூடுதல் கவனிப்புகள் வேறு!

Beauty Flowers (Pic: pinterest)

இதுவும் சுற்றுலா தளமாக வேண்டும்

இத்துணை அழகான ஒரு சந்தை, மதுரையின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய அம்சமாகக் கருதப்படவேண்டிய ஒன்று. தமிழ் மக்களின் கலாசாரம் சார்ந்த பண்பை பிரதிபலிக்கும் இப்பூக்களின் களஞ்சியம் இன்னும் கொஞ்சம் நல்ல முறையில் பராமரிக்கப்படலாம் என்பது எனது எண்ணம். முறையான சந்தை வடிவமைப்பு, கழிவு சேகரிப்பு, மற்றும் பராமரிப்பு போன்ற விடயங்கள் சீர்செய்யப்படுமிடத்து, மாட்டுத்தாவணி மலர்ச் சந்தை, மதுரையின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. முற்றத்து மல்லிகைபோல் இச்சந்தையின் மல்லிகைகளும் ஆகிவிடாது காப்பதற்கு உரிய தரப்பினர் மற்றும் பொதுமக்கள் கொஞ்சம் சிரத்தை எடுத்து மாற்றலாம்.

Tied Flower (Pic: boston)

இன்னொருமுறை மதுரை மண்ணை மிதிக்க வேண்டும் என்ற ஆவலை அடிக்கடி தரும் இடங்களில் இம்மாட்டுத்தாவணி மலர் சந்தையும் ஒன்று!

Web Title: Mattuthavani Flower Market

Featured Image Credit: Writer Herself

Related Articles

Exit mobile version