அரங்குகளுக்குள் சுற்றிச், சுற்றிச் சுழன்று வந்த காமிராவை 1977இல் இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் வெட்ட வெளிக்குச் சுமந்து வந்த காலம்தொட்டு தமிழ் சினிமா காமிராக்கள் படம்பிடித்த பெரும்பகுதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே என்பதில் சந்தேகமேயில்லை. ஆண்டுக்கு 10000 ஏக்கருக்கு மேல் நெல் மட்டும் அறுவடை செய்யப்படுவதோடு மஞ்சள், வாழை, கரும்பு என அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டு பசுமை சுமந்து நிற்கிறது இப்பகுதி. எழில் கொஞ்சும் இப்பசுமை வெளிக்குக் காரணம் பவானி ஆறும் ,அதன் கிளைக் கால்வாய்களும்தான். ஆகவே மண்மணம் மாறாத கதைக்களம் தொட்டே பயணிக்கத் தொடங்கிய 1980 களின் தமிழ் சினிமா அனைத்திற்கும் இந்த பசுமை நகரமே விருப்பமான இடமாகிப் போனதில் என்ன வியப்பிருக்க முடியும்? மண்ணின் மைந்தரான கே. பாக்கியராஜ் கொடுத்த பல வெற்றிப் படங்களும் இந்தப் பகுதியில் உருவானதே. தமிழ் சினிமாவின் பல பஞ்சாயத்துகளை இந்தப் பகுதி ஆலமரங்கள் கண்டிருக்கிறது. இளைய திலகம் பிரபுவின் ‘சின்ன தம்பி’யும், சரத்குமாரின் ‘நாட்டாமை’யும், கேப்டன் விஜயகாந்தின் ‘சின்ன கவுண்டர்’ திரைப்படமும் ஒட்டுமொத்த தமிழுலகையே இந்நகரம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினி, கமல், சத்தியராஜ், கார்த்திக், விஜயகாந்த் முதல் இன்றைய விஷ்ணு வரை இங்கு வராத நடிகர்களும் இல்லை, அம்பிகா, இராதா, குஷ்பு முதல் ஹன்சிகா வரை இங்கு வராத நடிகைகளும் இல்லை. இதனாலேயே இந்நகரம் ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
பசுமை நகருக்கு வரவேற்கும் எழில் கொஞ்சும் நுழைவாயில்
நெல்லும், வாழையும் அதிகம் பயிரடப்பட்டு அறுவடைக் காலங்களில் சாலைக்கு மேல் குறைந்தது நான்கு அடி உயரம் வளர்ந்து நிற்கும் அழகிய நெற்கதிர்கள் கொண்ட பசுமையான வயல்வெளிகள் நிறைந்த தூக்க நாயக்கன்பாளையம் சாலை
பல திரைப்படங்களில் வரும் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மேற்புறப்பகுதி
குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திற்கு வரும் அரியவகைப் பறவை இனங்கள்
மூன்றுபுறமும் சுற்றிலும் மலை சூழ்ந்த குண்டேரிப்பள்ளம்
நீர்த்தேக்கத்தின் அழகிய தோற்றம். சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதி இதற்கு வெகு அருகில்தான் உள்ளது.
குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் தென்கரைப் பகுதி. அக்கறையில் வனப்பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது.
குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மீன்பிடிச் சந்தை
சாலையின் இருமருங்கிலும் தோரண வாயில் போல் தொடர்ச்சியான மரங்களோடு காட்சியளிக்கும் கொடிவேரி சாலை.
பெரும்பாலான தமிழ் சினிமா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட கொடிவேரி நீர்த்தேக்கம்.
கொடிவேரி நீர்த்தேக்கத்தின் மேற்கே இருக்கும் பொதுப்பணித்துறைஅலுவலகம். சின்னத்தம்பி திரைப்படத்தில் கதாநாயகன் பிரபுவின் வீடு.
செவ்வாழை அதிகம் பயிரிடப்படும் கள்ளிப்பட்டி சாலை.
கள்ளிப்பட்டி சாலையோரத்தில் இருக்கும் செவ்வாழைத் தோப்பு .
200 ஆண்டுகள் பழமையான சி.கே.எஸ் பங்களாவின் வெளிப்புறத் தோற்றம். கடந்த 50 ஆண்டுகளாகத் திரைப்படத்திற்கு வாடகைக்கு விடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 8000 ரூபாய் என வாடகை வசூலிக்கப்படுகிறது.
சி.கே.எஸ் பங்களாவின் முகப்புத் தோற்றம். இங்கு படமெடுப்பது தவிர யாருமே தங்க அனுமதிக்கப்படுவதில்லை.
கொங்கு மண்டலப் பகுதியில் தொட்டி கட்டு வீடு என்று அழைக்கப்படும் சி.கே.எஸ் பங்களாவின் உட்புறத் தோற்றம்
சி.கே. எஸ் பங்களாவில் தொட்டிகட்டு அமைப்பின் மையப் பகுதி
பல திரைப்படங்களில் வரும் நகரின் மையப் பகுதியில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி
அதே சத்தியமங்கலம் சாலையில் திரைப்படத்திற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட அரசுக் கட்டிடமான பயணியர் விடுதி.
‘கோயில் காளை’ என்ற விஜயாகாந்த் திரைப்படம் முழுவதுமே படமாக்கப்பட்ட பாரியூர் அம்மன் கோவில். நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது.இந்தக் கோவில் குண்டம் (தீமிதி) திருவிழாவும், சத்தியமங்கலம் அடுத்து இருக்கும் பண்ணாரி அம்மன் குண்டமும் மிகவும் புகழ்பெற்றது.
பல பிரபலத் திரை நட்சத்திரங்கள் விரும்பித் தங்குகிற எமரால்ட் விடுதி. ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.