இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் சுற்றுலா நிரலில் அதிகம் இடம்பிடிக்கக் கூடிய நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவுக்கு வணிகத்துக்காக செல்லும் அளவுக்கு சமமாக, நமம்வர்கள் உல்லாச பயணங்களுக்கு செல்லுவதற்கும் தவறுவதில்லை. அதிலும், பெரும்பாலானோர் தேர்வாகவிருப்பது குளிர்மையான சூழலையும், ஏரிக் கரையோரங்களையும், இயற்கை வனப்பையும் தன்னகத்தே கொண்ட கேரளாவாகத்தான் இருக்கும். கேரளா தவிர்த்து இன்னும் பல தேர்வுகள் இந்தியா முழுவதுமே கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், நம் இலங்கையில் நமக்கு இவ்வாறான காலநிலையில் அதிகம் பரீட்சியமான இடங்கள் நுவெரலியா சார்ந்த மலைப் பகுதிகளிலேயே இருக்கிறது எனலாம். அதிகரிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கிடைக்கும் விடுமுறைகளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என எல்லோரும் சேர்ந்துகொள்ள இப்போதெல்லாம் மலைநாடு நகரமுடியாத கொழும்பு மாநகரின் வீதிகளுக்கு ஒப்பாகிப் போய்விட்டது. அப்படியாயின், அமைதியாக இயற்கை வனப்பையும், குளிர்ந்த காலநிலையும் இரசிக்கக் கூடிய இடங்கள் இல்லையா என சற்றே தேடிப் பார்த்தோம். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபல்யமாகும் செம்புவத்த ஏரி தொடர்பில் அறியக் கிடைத்தது.
செம்புவத்த ஏரி
செம்புவத்த ஏரியின் அமைவிடமானது மாத்தளை மாவட்டத்தின் எல்கடுவ எனும் இடத்தில் உள்ளது. இது இயற்கை ஊற்றை அடிப்படையாகக்கொண்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கையை ஆண்ட பிரித்தானியர்களினால் இதற்க்கு அண்மையிலுள்ள தேயிலை தொழிற்சாலையின் பயன்பாடு உட்பட இன்னும் பலவித பயன்பாட்டு நோக்கம் கருதியும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த ஏரியானது எல்கடுவ தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட இடத்தில் அமைந்திருக்கிறது. ஏரியில் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, நீராட தடையுள்ளபோதிலும், வருகை தருபவர்களது சுற்றுலா பயணத்தின் நோக்கம் கெடாதவகையில் இயற்கையோடு இணைந்ததாக நீர் தடாகங்கள் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
தயார்படுத்தல்களும், பயணிக்கும் முறையும்
செம்புவத்த ஏரியானது மாத்தளை நகரின் மையப்பகுதியிலிருந்து 25 KM தொலைவிலும், கண்டியிலிருந்து 30 KM தொலைவிலும் அமைந்துள்ளது. எனவே, ஏரிக்கு கண்டி நகரின் வழியாக அல்லது குருநாகல் வழியாக புத்தளம் – கட்டுகஸ்தோட்ட அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியும் பயணிக்கலாம். பயணத்தில் இறுதி 10-20 KM வரையான பாதை மிக குறுகியதாகவும், மலைநாட்டு சாயலில் கரடு முரடானதாகவும் அமைந்திருப்பதால், அதற்கான தயார்படுத்தலுடன் செல்வது சாலச் சிறந்தது.
செம்புவத்த ஏரிப் பயணத்தை சிறந்தமுறையில் திட்டமிட்டால் குறைந்தது ஒருநாள் பொழுதில் சென்று வரலாம். நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் நாளை செலவிட வேண்டுமாயின் அங்கே ஒரு இரவுப்பொழுதைக் கழிக்கக் கூடியவகையில் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில், குறைந்தது ஒரு நாள் முழுமையாக தொழில்நுட்பங்களை தூரவைத்துவிட்டு, மாலை இதமான குளிருடன் ஆரம்பித்து, நள்ளிரவை நட்சத்திரங்களுடன் கழித்து, அதிகாலையை சூரியக் குளிருடன் அனுபவித்துவிட்டு திரும்ப வேண்டும் என்பேன்.
செம்புவத்த ஏரியின் சிறப்பம்சங்கள்
செம்புவத்த ஏரியானது ஏனைய இடங்களைப்போல, மக்களது நடமாட்டம் அதிகமாகி இன்னமும் தன் அழகை இழக்காமல் இருப்பதே அதன் சிறப்பம்சம் என்பேன். பெரும்பகுதி மலைகளாலும், மழைக்காடுகளாலும் சூழ்ந்து நிற்க, மற்றுமொரு பகுதி தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டு நடுவே அமைதியின் அழகாய் இந்த ஏரி அமைந்திருக்கிறது.
உச்சியில் அமைந்துள்ள ஏரி வரை மக்கள் தத்தமது வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவதுடன், அங்கே ஏரியை சுற்றி மக்களது விடுமுறை பொழுதைக் கழிக்கக் கூடியவகையில் பல்வேறு ஏற்பாடுகள் ஏரியினை பராமரிக்கும் எலகடுவ கூட்டுறவு சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அமைதியாக ஏரியை சுற்றி வந்து அழகை இரசிப்போர்க்கும், இடைநடுவே சிலபல பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளுவோர்க்கும் இவ்விடம் சாலப் பொருத்தமானதாகும்.
பனிமூட்டம் முழுமையாக ஏரியை மறைத்து, உங்களையும் அந்த பனிப்புகார் கடந்து செல்லும் அழகை காணவும் அதனை அனுபவிக்கவும் மாத்திரம் இந்த ஏரிக்கு செல்லலாம் என்று கூறுவேன். அத்தனை கொள்ளை அழகையும், அமைதியும் தன்னகத்தே கொண்டிருக்கிறது செம்புவத்த ஏரி.
செம்புவத்த ஏரியில் நீராட பொதுமக்கள் அனுமதிக்கபடாமை காரணமாக, இயற்கை ஊற்றைக் கொண்டு நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கையாகவே அந்த தடாகத்துக்கு நீர் போக்குவரத்து உள்ளதன் விளைவாக, எந்நேரமும் நீரானது குளிர்ச்சியாகவும், புதியதாகவும் இருக்கிறது.
கவனிக்க வேண்டியவை
செம்புவத்த ஏரியானது எலகடுவ கூட்டுறவு சங்கத்தினால் பாரமரிக்கபடுவதன் காரணமாக, இங்கு பயணப்படும் உள்நாட்டு பயணிகளுக்கு 200/- நுழைவுச்சீட்டும், வெளிநாட்டு பயணிகளுக்கு 1,000/-க்கு மேற்பட்ட தொகை நுழைவுச்சீட்டாகவும் வசூலிக்கப்படுகிறது. சொந்த வாகனம் அல்லாது பொதுப்போக்குவரத்து மூலமாக செம்ம்புவத்த ஏரியின் அடிவாரத்தை அடைபவர்களுக்கு முச்சக்கர வண்டி வசதிகளும் உண்டு. அந்த ஊரைச் சார்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சவாரிக்கு குறைந்தது 1,000/-வை அறவிடுகிறார்கள்.
செம்புவத்த ஏரியானது காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை மாத்திரமே சாதாரண நுழைவுச்சீட்டு பாவனையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. எனவே, ஒருநாள் பயணமாக செல்லுபவர்கள் குறித்த நேரத்துக்கு முன்னதாக செல்லக்கூடியதாக பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுவது சிறந்தது. அதுபோல, தங்கியிருக்க விரும்புவர்கள் அதற்கான ஏற்பாடுகளை முற்கூட்டியே நிர்வாகத்தை தொடர்புகொண்டு செய்துகொள்ள வேண்டும்.
இந்தப்பாதையில் பெருவாரியான மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், திருட்டு சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகிறது. எனவே, உங்கள் உடமைகளுக்கு நீங்களே பொறுப்பானவர்களாக இருக்கவேண்டும். மிக முக்கியமாக, ஏரியை பராமரிக்கும் நிர்வாகிகள் ஏரிப் பகுதிக்கு செல்வோர் மது அருந்தி செல்வதையோ அல்லது மதுபானத்தை கொண்டு செல்வதனையோ அனுமதிப்பதில்லை. உதாரணமாக, நீங்கள் உள்நுழைய முன்பும் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால் நீங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டீர்கள். எனவே, இவை தொடர்பில் மிக அவதானமாக இருங்கள்.
மாத்தளை நகரை கடக்கும்போதோ அல்லது செம்புவத்த ஏரியின் மலை அடிவாரத்தை அடையும் முன்போ உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள். ஏரி அமைந்துள்ள பகுதியில் உணவகங்களோ, நீங்கள் எதிர்பார்க்கும் கடைகளோ இல்லை. எனவே, அவற்றினை பெற சில மணிநேரத்தை செலவு செய்து மீளவும் நகருக்கு செல்லவேண்டி இருக்கும்.
செம்புவத்த ஏரியின் இயற்கை வனப்பையும், அழகையும் இரசிக்கும் நீங்கள் அங்குள்ள இயற்கையின் வனப்பு கெடாமல் நடந்துகொள்ளுவதும் அவசியாகும். எனவே, பொலித்தீன் பாவனை , குப்பைகளை கண்டபடியாக போடுவது போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சுற்றுலாவை முழுமைபெறச் செய்வதுடன், அங்கு செல்லும் அடுத்தவருக்கும் நீங்கள் பெற்ற அதே அனுபவத்தைப்பெற வழிசெய்யும்.