டிசம்பர் மாதம் தொடங்கி விட்டாலே கிறிஸ்துமஸ் தொடங்கி விட்டது என்று தான் அர்த்தம். கிறிஸ்தவ மக்களின் வீடுகள் மட்டுமன்றி அனைத்து தொழிற்சாலைகளிலும், கம்பனிகளிலும் கிறிஸ்துமஸ் மரங்கள் ஜொலித்து கொண்டிருக்கும். சந்தோஷத்தை கொடுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சில சுவாரஸ்ய விடயங்கள் இதோ :
கிறிஸ்துமஸ் மரத்தின் ஆரம்பம் இளவரசர் ஆல்பர்ட்.
ஜேர்மனி நாட்டு இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவிக்கு அதாவது விக்டோரியா மாகாராணிக்கு குளிர்காலத்தை பசுமையாக மாற்றவும் வசந்த காலத்தை வரவேற்கவும் ஒரு பரிசு கொடுக்க விரும்பினாராம். அதற்காக இம்மரத்தை பரிசளித்துள்ளார். அன்றிலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் மரம் வைக்கும் கலாசாரம் ஆரம்பமாகியதாம். இந்நிகழ்வை சித்தரிக்கும் விதத்தில் 1848 ஆம் ஆண்டில் Illustrated London News பத்திரிக்கையில் ஒரு சித்திரம் வெளியாகி அனைவர் மத்தியிலும் வைராகியுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையில் நீண்ட தாடி கொண்டவர் இல்லையா?
கிறிஸ்தவ கதைகளின் படி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியார் நிக்கோலஸ் தனது பரம்பரை சொத்துக்கள் அத்தனையையும் ஏழைகளுக்கு வழங்கியும் மற்றும் அடிமையாக்கப்பட்டிருந்த பெண்களை மீட்கவும் போராடியுள்ளாராம். இவரது இச்செயல் எல்லா இடங்களிலும் அக்காலத்தில் பரவியதால். அப்போது ஒல்லாந்தர்கள் இவருக்கு ‘Sinter Klaas’ எனப் பெயரிட்டுள்ளனர். அதன் பின்னர் அப்பெயர் ‘Santa Claus’ என மாறியுள்ளது. அதனோடு சேர்ந்து அவரது தோற்றமும் மாற்றமடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா என்ற ஒரு நபர் தோற்றம் பெற புனிதர் நிக்கோலஸ் அவர்களே காரணம்.
santa claus இன் உருவத்தில் coca -cola நிறுவனத்திற்கும் பங்குண்டா!
coca -cola நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சான்டாவின் உருவம் சற்று பயமுறுத்தும் வண்ணம் அமைந்ததாம். இதனால் 1931 ஆம் ஆண்டில் இக்குளிர்பான நிறுவனம் பத்திரிக்கை விளம்பரங்களுக்கான சான்டாவின் படத்தை வரைய Haddon Sundblom என்ற ஓவியரை அழைத்துள்ளனர். அவர் சந்தோஷமான குதூகலமான சான்டாவின் படத்தை வரைந்துள்ளார். அப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் சான்டா கிளாஸின் உருவம் இவ்வாறுதான் உருவானதாம்.
புகைபோக்கியின் அருகே ஏன் காலுறைகள் அலங்காரமாக தொங்கவிடப்படுகின்றன?
தனது மூன்று மகள்களின் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாமல் ஏழையொருவர் அவதிப்பட்டுள்ளார். இதை அறிந்த பாதிரியார் நிகோலஸ் அவர்களின் வீட்டின் புகைபோக்கியின் வழியாக ஒரு தங்கப்பையை போட்டுள்ளார். அந்த இடத்தில்தான் அவரது பெண்கள் தங்களது காலுறைகளை காயவைத்துள்ளனர். இச்சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தான் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் காலுறைகள் தொங்கவிடப்பட்ட ஆரம்பிக்கப்பட்டதாம்.
‘Jingle Bells’ ஒரு நன்றி பாடல்….
உண்மையில் ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடல் “Dashing through the snow” என்று ஆரம்பமாகவில்லையாம். James Lord Pierpont என்பவர் “One Horse Open Sleigh” என்ற பாடலொன்றை எழுதி அதனை அவரது தேவாலயத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பாடியுள்ளார். அப்பாடலை 1857 ஆம் ஆண்டில் தற்போது பாடும் தலைப்பின் கீழ் மறுவெளியீடு செய்யப்பட்டு இன்று பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலாக அமைந்துள்ளது.
விண்வெளியில் ஒலி பரப்பான முதல் பாடல் ஜிங்கிள் பெல்ஸ்!
1965 ஆம் ஆண்டு நாசாவினால் ஜெமினி 6 என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இவ்விண்கலம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒன்பது நாட்கள் இருக்கும் போது வெற்றிகரமாக திரும்பி வரும் வழியில் அதிலிருந்த விண்வெளி வீரர்கள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஒரு பூமியின் வளிமண்டலத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பயணிப்பதாக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்களாம். கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கையை கேட்டு பதறிக்கொண்டு இருக்கும் போது ஒரு ஹார்மோனிகா இசை கேட்டுள்ளது அதில் ஜிங்கிள் பெல்ஸ் கீதம் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் இது இன்றைய கால பிராங்க் என்று தெரியவந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாடுவது சட்டவிரோதமானது!
பியூரிட்டன் என்னும் புரட்சியாளர்கள் பாஸ்டனில் குடியேறியபோது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது சட்ட விரோதமான செயல் என்று அறிவித்துள்ளனர். அதையும் மீறி கொண்டாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டதாம். கிறிஸ்துமஸ் பண்டிகை சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லையாம்.
கிறிஸ்துமஸ் விருந்தில் ‘eggnog’ எனும் குளிர்பானம் வந்தது எப்படி?
ஜேம்ஸ்டவுன் எனும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் குடியேறிய அமெரிக்கர்கள் முட்டையை வைத்து முதன் முதலில் இந்த குளிர்பானத்தை தயாரித்துள்ளனர். nog என்ற வார்த்தை grog என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ரம் என்ற மதுபானம் கொண்டு தயாரிக்கப்படும் பானம் ஆகும்.
“கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் போது நடக்கும் விபத்துக்களில்…..”
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யும் போது நடக்கும் விபத்துகளில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15000 என்கின்றது Consumer Product Safety Commission ஆய்வுகள். இவ்விபத்துக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் காலகட்டத்தில் இடம்பெறுகிறதாம்.
“சுமார் 90% அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள் ஆனால்…..”
அமெரிக்கர்கள் அக்டோபர் மாதம் ஆரம்பம் முதலே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கின்றனராம். ஆனால் சுமார் 90% அமெரிக்கர்கள் இப்பண்டிகையை கொண்டாடினாலும் தேவாலயத்திற்கு வந்து வழிப்படுபவர்களின் எண்ணிக்கை 51% தான் என்று Pew ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அமெரிக்கர்கள் கிட்டத்தட்ட 1000 டாலர்களை பரிசுப்பொதிகளுக்காக செலவிடுகின்றனரா?
தேசிய சில்லறை கூட்டமைப்பின் ஆய்வுகளின்படி 2017 ஆம் ஆண்டில் சராசரியாக 967.13 டாலர்களை செலவளித்துள்ளனராம். 2018 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மொத்த சில்லறை விற்பனை 717.45 பில்லியன் டாலர்களை எட்டியது என்கின்றனர்.
Tinsel எனும் அலங்காரப்பொருள்.
இது முதன் முதலில் 1610 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் தூய வெள்ளியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஈயமும் சேர்க்கப்பட்டதால் நச்சுத்தன்மை கொண்டது என அமெரிக்கா அரசாங்கம் இதனை தடை செய்தது. அதன் பிறகு இவலங்காரப்பொருள் இப்பொழுது chintz எனும் சீட்டித்துணியால் தயாரிக்கப்படுகிறது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்கள்!
இன்று 98% அமெரிக்க கிறிஸ்துமஸ் மரங்கள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் கலிபோர்னியா, ஓரிகான், மிச்சிகன், வாஷிங்டன், விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் வட கரோலினா ஆகியன சிறந்த கிறிஸ்துமஸ் மரங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க மாநிலங்கள் ஆகும்.