கொரோனா வைரஸ் இலங்கையில் தோற்றுவித்திருக்கும் பொருளாதார வீழ்ச்சி | ஒரு பார்வை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 1,800,000 மேற்பட்டவர்கள் COVID-19 இனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. COVID-19 பரவல், நோயாளர்களையும் மரணவிகிதங்களையும் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வணிகங்களுக்கும் அதன் நஷ்டங்களை கணக்கிட வழிசெய்துள்ளமை பெரும் சோகமாகும்.

கொரோனா வைரஸின் பரவலால் சீனாவின் பொருளாதாரமே முதன்முதலில் பாதிக்கப்பட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொருளாதார பாதிப்புகள்  பெருகத்துவங்கியபோது, உலகெங்கிலும் உள்ள நாடுகள் தமது சிக்கல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.

வணிக நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டு குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளிவரமுடியாத நிலை உருவாகியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அகற்றப்படாமல் அமுலில் உள்ளது. ஒவ்வொரு நாளும் விடியும் போது வாழ்க்கைமுறை மாற்றத்திற்குள்ளாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் சாதாரண பொருளாதார நடவடிக்கைகள் கூட சீர்குலைந்துள்ளன.

நிறுவனங்களினது மற்றும் வாழ்வாதாரங்களினதும் சரிவைத் தடுக்க அரசாங்கங்கள் முனைகின்றன. உலகம் ஏற்கனவே மந்தநிலைக்குள் நுழைந்துவிட்டதாக பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இப் பொருளாதார வீழ்ச்சி பல தலைமுறைகளுக்கு பிறகு தொற்றுநோயினால் தோன்றியுள்ள மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக கணிக்கப்படுகிறது. அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் முதல் தடவையாக 200 ரூபாவாக உயர்ந்துள்ளது.

வணிக உத்தரவாதம், வரி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றாகிய PwC, இலங்கையின் பொருளாதார நிலைப்பற்றி தெரிவித்திருக்கும் சமீபத்திய கருத்து இது:

 “2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை COVID19  தொற்றுப்பரவல் இருந்தால், பொருளாதார மீட்சி ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும். இந்த ஆண்டு உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2% க்கும் குறைவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

மேலும் அந்நிறுவனம் பின்வரும் துறைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் தமது ஆய்வுத்தகவலை வழங்கியுள்ளது.

1). சுற்றுலாத் துறை

தொற்றுநோய் காரணமாக உலகளாவிய பயணங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதோடு, சில நாடுகளுக்கு வழங்கப்படுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன், இலங்கையின் சுற்றுலாத் துறை கணிசமாக பாதிக்கப்படும். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைய தரவுகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை 30% க்கும் குறைந்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகள் தவிர ஏனையோருக்கு (பெரும்பாலும் சுற்றுலா பயணிகளுக்கு) இலங்கைக்குள் வர தடை உள்ளதாலும், மேலும் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறையில் சரிவை ஏற்படுத்தியுள்ளதோடு ஏப்ரல் முதல் மேலதிக தாக்கத்தை நாம் காண்போம். ஏடிபி மதிப்பீடுகளின்படி, 2020 மார்ச் 06 ஆம் தேதி நிலவரப்படி, இலங்கைக்கான சுற்றுலா வருவாயின் வீழ்ச்சி 107 மில்லியன் USD முதல் 319 மில்லியன் USD வரை இருக்கலாம். பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்தால் இப்பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

2. ஆடை உற்பத்தி துறை

தேசிய ஏற்றுமதியில் வருவாயில், 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான வருவாயை பெற்று அதிக பங்களிப்பு செய்வதில் ஆடை உற்பத்தி ஒன்றாகும். சிபிஎஸ்எல் வழங்கிய பிப்ரவரி 2020 நிலவரப்படி பி.எம்.ஐ தரவின் அடிப்படையில், “புதிய ஆர்டர்கள்” மற்றும் “வேலைவாய்ப்பு” ஆகியவை குறைந்துவிட்டன, குறிப்பாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஆடைத் துறையில் உலகளாவிய தேவை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வலையமைப்பில் பிரதான நாடுகளில் ஒன்றான இத்தாலி போன்றநாடுகளை பாதித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவலால், வழங்கல் (supply) பிரிவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக அவற்றின் மூலப்பொருள் இறக்குமதி தாமதமாகியுள்ளது என பி.எம்.ஐ.யின் தரவுகள் சுட்டிகாட்டுகின்றன. எனவே, நிறுவனங்கள் குறுகிய காலத்தில் உற்பத்தியில் சரிவை எதிர்பார்க்கின்றன. மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்படுமென தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர், மேலும் வைரஸ் பரவல் தொடர்ந்தால் இவ் இழப்புகள் இன்னும் அதிகரிக்கும்.

3) கட்டுமானம் மற்றும் பொறியியல் துறை

சீனாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் பல உயரமான கட்டிடத் திட்டங்கள் மந்தநிலைக்கு உள்ளாகியுள்ளது. கட்டுமானத் தொழில் வல்லுநர்களை அடிப்படையாகக் கொண்டு, பல தொழில்துறை மையங்களில் உள்ள தொழிற்சாலைகளைத் திறக்க சீன அரசு அனுமதித்திருந்தாலும், மீளவும் பழைய நிலைக்கு திரும்ப அதிக நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சீனப் புத்தாண்டுக்குப் பிறகு கட்டுமானத் தொழிலாளர்கள் முடக்கப்பட்டதுவும் தொழில்துறையை மோசமாக பாதித்தது, ஏனெனில் பல கட்டுமானத் திட்டங்கள் சீன ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நடுத்தர வருமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை சிறிதளவு ஆரம்பிக்கப்ட்ட நிலையிருந்தபோதிலும் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வீழ்ச்சியால், மற்றும் வேலை நிறுத்தத்தால் ஏற்படும் தாமதங்களால் பாதிப்பிற்குள்ளாகும். அத்துடன். முதலீட்டாளர்களது நிலையை மனதளவில் பாதிக்கச்செய்யும் சாதியங்களும் அதிகம்.

4) சில்லறை வியாபாரம் மற்றும் நுகர்வோர்.

சமூக இடைவெளியை கடைபிடித்தல் நடவடிக்கைகளால், குறிப்பாக சில்லறை மற்றும் நுகர்வோர் துறைக்கு ஒரு பெரிய பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2020 இல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட சமயத்தில் காணப்பட்ட “பீதியால் பொருள் வாங்குதல்” (panic buying) நிலையானது, நீண்டகால ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் சில்லறை மற்றும் நுகர்வோர் துறையை மந்தமாக்கிவிடும் நிலை எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த காலவரையற்ற ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய வீட்டு மற்றும் நுகர்வு பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது தனியார் கூட்டாண்மை முயற்சிகளை அவதானிக்க முடிந்தது.

இந்த நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் (எ.கா. மளிகை பொருட்கள்) தொடர்பான சில்லறை மற்றும் நுகர்வோர் தயாரிப்புகள் தொடர்ந்தும் பொருள் வழங்கலை (supply) நகர்த்த முயற்சிக்கும். பல சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடரும் எண்ணத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரையறுக்கப்பட்ட பொருள் விநியோகங்களை (limited deliveries) மாத்திரமே செய்து மாற்று முறைகளை கையாளும் நிலையை நம்பியுள்ளமை தெளிவாகிறது. ஆடை மற்றும் மின்சாதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான தேவை குறையும். இறக்குமதி கட்டுப்பாடுகள் சில்லறை விற்பனையை மேலும் குறைக்கக்கூடும்.

5) வங்கி மற்றும் நிதித் துறை

எந்தவொரு பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக வங்கித் துறை இருப்பதால், எந்தவொரு குறிப்பிடத்தக்க பொருளாதார வீழ்ச்சியும் வங்கிகளை நேரடியாக பாதிக்கும். கடினமான இயக்க நிலைமைகள் காரணமாக, வங்கித் துறை மற்றும் குறிப்பாக NBFI களின் செயல்திறன் மிகவும் சவாலானதாக இருக்கும், இது சொத்து தரம் மற்றும் இலாப மீட்பு ஆகியவற்றை பாதிக்கும். அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஆறு மாத கடன் தடை மற்றும் பிற நடவடிக்கைகள் தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் தாக்கத்தை மென்மையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் 2020 இல் செயல்படாத கடன்களை அதிகரிக்கும்.

மேலும், Fitch மதிப்பீடுகளின்படி, இலங்கையின் வங்கித் துறையின் கண்ணோட்டம் 2020 ஆம் ஆண்டிற்கு எதிர்மறையாக கணிப்படுகிறது. நிதி நிறுவனங்களுக்கான பணப்புழக்கத் தேவைகளைக் குறைப்பதன் மூலம் ஓரளவிற்கு ஈடுசெய்யப்பட்டாலும், நிதித் துறையின் பணப்புழக்கம் கடன் தடைகளால் பாதிக்கப்படும். இது போன்ற நெருக்கடிகளுக்கு செல்ல நிதி திறன் இருக்க வேண்டும் என்பதால் NBFI களின் மூலதனத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாக உணரப்படும். நிச்சயமற்ற நிகழ்வுகளை நாம் எதிர்கொள்வதால் வங்கிகளின் அழுத்தம் அதிகரிக்கும் நிலை இருக்கும்.

வேலையின்மை சிக்கல்கள் 
மேற்சொன்ன துறைகள் தவிர அனைத்து துறைகளும் அவற்றின் தன்மைக்கேற்ப பெரும் தாக்கங்களை சந்திக்க நேரிடலாம். வேலையினமை அதிகரிக்கும் சந்தர்ப்பம் எழும். பெரும் தொழிற்பணியாளர்கள் முடக்கப்படுவர். சராசரி வருமானம் பெறும் தனிநபரின் வருமானம் குறைய நேரிடும். வேலையை தக்க வைத்துக் கொள்ள அனுவலக பணியாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும் நிலை தோன்றும்.

பாதிப்புகளை குறைக்கும் வண்ணம் பொது தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழில் வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் தமது பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய பெரும் முயற்சிகளை மாற்றுவழிகளை செய்யத்துவங்கியுள்ளது.

Related Articles

Exit mobile version