விடைபெற்றான் மாலிங்க எனும் அபார வீரன்

யோர்க்கர் இல்லாத ஃபாஸ்ட் போலிங் போடவும், முக்கியமான சமயத்தில் டெத் போலிங் செய்யவும் ஆளில்லாமல் திணறப்போகும் இலங்கை கிரிக்கட் அணியை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம்பிக்கைத் தந்து ஆரம்பித்து வைக்க முதல் ஓவரைப் போட இனி ஆளில்லை. எந்த பெட்ஸ்மனுக்கு எப்படி போட வேண்டும் என்ற நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க ஆளில்லை. இனி இப்படித்தான் இருக்கப் போகிறது இலங்கை அணி.

காரணம் மாலிங்க அணியில் இல்லை….

15 ஆண்டுகள் இலங்கை அணிக்காக உழைத்த, பல இக்கட்டான போட்டிகளை தன் அபார பந்துவீச்சைக் கொண்டு வெற்றிவாகைச் சூட வைத்த லசித் மாலிங்க இனி ஒருநாள் இலங்கை அணியில் இல்லை. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓய்வை அறிவித்த பிறகு அந்தப் போட்டியின் முதல் விக்கெட்டையும் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதும் மாலிங்கதான்.

யோர்க்கர் நாயகன் என்று வர்ணிக்கப்படும் இவர்தான் உலக வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அதிகமான யோர்க்கர்கள் வீசியவர். ஒருநாள் அரங்கில் மாத்திரம் மாலிங்க 1018 யோர்க்கர் வீசியுள்ளார். இவருக்கு அடுத்த படியாக 390 யோர்க்கர்கள் வீசியுள்ளார் நியூசிலாந்தின் டிம் சௌதி. மூன்றாவது இடத்தில் இருக்கிறார் இலங்கையின் மற்றொரு வீரரான நுவன் குலசேகர. இவர் 338 யோர்க்கர் போட்டிருக்கிறார். மிட்சல் ஸ்டார் 337, ட்ரண்ட் போல்ட் 251 யோர்க்கர்களுடன் அடுத்தடுத்த இடங்கில் உள்ளனர்.

படஉதவி : dailyindia.in

இப்படி பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்த மாலிங்க குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்…

  • சிலிங்க மாலிங்க என அழைக்கப்படும் லசித் மாலிங்கவின் முழுப்பெயர் செபரமாது லசித் மாலிங்க. இவர் 1983ஆம் ஆண்டு காலியில் பிறந்தார். இவருக்கு தற்போது 36 வயதாகின்றது. 

  • இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய சமிந்த வாஸின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்பக்கூடிய நபராகவும், பந்துவீச்சு படைக்கு தலைமையேற்று வழிநடத்தும் வீரராகவும் லசித் மாலிங்க விளங்கினார்.

  • மாலிங்காவின் பந்துவீசும் பாணி மற்றும் அவரது தலைமுடியின் ஸ்டைல் பலரையும் கவர்ந்த ஒன்று. இவரது இந்த தலைமுடி ஸ்டைலுக்காகவே கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாதவர்களும் லசித் மலிங்கவை அறிந்து வைத்திருந்தனர். இதனால் பல போட்டிகளுக்கு லசித் மாலிங்க தூதராகவும் செயற்பட்டிருக்கிறார். 

லசித் மலிங்க
படஉதவி : theweek.in
  • பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சொய்ப் அக்தரை ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைப்பதைப் போன்று இலங்கை அணியின் வலதுகை பந்துவீச்சாளரான மாலிங்கவை ”ரத்கம எக்ஸ்பிரஸ்” என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். காரணம் மாலிங்க ரத்கவில் பிறந்தவர் என்பதால்.

  • சர்வதேச ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மாலிங்கதான். 2007 உலகக் கிண்ணத்தில் 210 ஓட்டங்களைப் பெற்றால் போட்டியில் வெற்றிபெற முடியும் எனும் இலக்கோடு தென்னாபிரிக்கா விளையாடியது. 32 பந்துகளில் வெற்றிக்கு நான்கு ஓட்டங்கள்தான் தேவைப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன. 45ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 47ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இருவரை வெளியேற்றினார். 10 பந்துகளில் ஒரு ஓட்டத்திற்கு 4 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. கடைசியில் தட்டுத் தடுமாறி தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.  

  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று தடவைகள் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளரும் மாலிங்கதான். 2007இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2011இல் கென்யா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஹெட்ரிக் எடுத்தார்.

  • உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு முறை ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் எனும் பெருமையும் மாலிங்கவுக்கு மட்டுமே. மேற்கிந்தியத் தீவுகளின் நடைபெற்ற 2007 உலகக் கிண்ணத்தில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும் இலங்கையில் நடைபெற்ற 2011 ஆம் உலகக் கிண்ணத் தொடரின் ஆட்டமொன்றில் கென்யாவுக்கு எதிராகவும் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

  • மாலிங்க போலிங்கில் மட்டுமல்ல. பெட்டிங்கிலும் இலங்கைக்கு பெரிதும் உதவியிருக்கிறார். 1983 உலகக் கிண்ணத்தில் கபில்தேவ் – கிர்மானி படைத்த ஒரு சாதனை 27 ஆண்டுகளுக்கு பின்னர் மாலிங்க- மெத்தியூஸ் ஜோடியால் தகர்க்கப்பட்டது. சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் – கிர்மானி இணை 9ஆவது விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை சேர்ந்திருந்தது. 2010 ஆம் ஆண்டில் மெல்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெத்தியூஸ் – மாலிங்க ஜோடி 9ஆவது விக்கெட்டுக்கு 132 ஓட்டங்களை எடுத்தது. அப்போட்டியில் 240 ஓட்டங்களைத் துரத்திய இலங்கை அணி 107 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் மாலிங்க- மெத்தியூஸின் அபார ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மாலிங் அந்தப் போட்டியில் 48 பந்துகளைச் சந்தித்து 6 பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 56 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 10 பேரில் மூவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் 534 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். வாஸ் 322 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மாலிங் 15 ஆண்டுகளில் 226 போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

முரளிதரன், சமிந்த வாஸ் மற்றும் லசித் மலிங்க
படஉதவி : dailytimes.com.pk
  • ஒருநாள் போட்டிகளில்  ஓர் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அதிகமுறை கைப்பற்றியவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் மாலிங்க உள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 13 முறை குறைந்தது 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முரளிதரன் 10 முறை இதைச் சாத்தியப்படுத்தினார். அப்ரிடி மற்றும் பிரெட் லீ 9 முறை சாதித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக எட்டு முறை ஒருநாள் போட்டிகளில் குறைந்தது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மலிங். 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய மாலிங்க தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷிற்கு அணிக்கு எதிரான முதல் போட்டியுடன போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ளார். இப்போட்டியில் தான் வீசிய கடைசி பந்தில் விக்கெட் எடுத்தார். அந்த பந்தோடு பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. இப்போட்டியில் மலிங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லசித் மலிங்க
படஉதவி : newsclick.in
  • டெஸ்ட் போட்டிகளில் 2011இல் ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 2019இல் ஓய்வு பெற்றார். இருபதுக்கு 20 போட்டிகளில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் வரை விளையாடுவேன் என மலிங்க கூறியுள்ளார்.

முகப்பு பட : wisden.com

Related Articles

Exit mobile version