இலங்கையின் பங்குச்சந்தை
இலங்கையில் உள்ள உத்தியோகபூர்வமான பங்குச்சந்தையானது தலைநகரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், “கொழும்புப் பங்குச்சந்தை” (Colombo Stock Exchange) என்கிற பெயருடன் எல்லோராலும் அறியப்படுகிறது. அடிப்படையில், நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஓர் வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்கும் பொறுப்புள்ள நிறுவனமாக இதுவுள்ளது.
அத்துடன், பங்குச்சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் அனைத்துமே மத்திய வைப்பக முறைமை (Central Depository System) ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்டு முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்கும்பொருட்டு, மிக அவதானமாகக் கண்காணிக்கப்படுகிறது. சாதாரணமாக, கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பொதுக் கம்பனிகள் தமது பங்குகளையும் ஏனைய பொருத்தமான நிதி உபகரணங்களையும் பட்டியலிட முடியும். இதற்கென இரண்டுவகையான பலகைகள் (Boards) பயன்படுத்தப்படுகிறன. பிரதான பலகையில் (Main Board) , பாரிய மூலதனத்தை கொண்ட கம்பனிகள் தம்மை பட்டியல்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுவதுடன், சிறிய மற்றும் நடுத்தர மூலதனத் தொகையை கொண்ட நிறுவனங்கள் திரி சாவி பலகையில் தம்மை பட்டியல்படுத்திக் கொள்ளமுடியும்.
இவற்றுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு நாளும் பங்குப் பரிவர்த்தனை இடம்பெறுகின்றபோது, பங்குச்சந்தை எவ்வாறு செயற்படுகிறது? அதன் நிலை திருப்திகரமானதாக உள்ளதா? இல்லையா? என்பனவற்றை இலகுவாக அறிந்துகொள்ள, அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (All Share Price Index – ASPI) மற்றும் S&P SL20 விலைச்சுட்டி என்பனவும் பயன்படுத்தப்படுகிறன.
பங்குகள் (Shares) என்றால் என்ன ?
விரிவுபடுத்தப்பட்ட நிறுவனங்கள் தமது தொழிற்பாட்டு மற்றும் மூலோபாய தேவைகளுக்கு தேவையான நிதியினை பெற்றுக்கொள்ள வெவ்வேறு நிதிமூலங்களை நாடுகின்றன. இத்தகைய நிதிமூலங்களை பிரதானமாக உரிமை மூலதன மூலங்கள் (Ownership Fund Source) , கடன் மூலதன மூலங்கள் (Debt Fund Source) என இரண்டு வகையாக குறிப்பிட முடியும். கடன் மூலதன வழிகள் என்பது, வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளுகின்ற கடன் மற்றும் முறிகளை வழங்கி திரட்டப்படும் கடனாகவும் உள்ளது. கடன் மூலதனத்தை பொறுத்தவரையில், அது கடனாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்ற பணம் என்பதனால், அது நிச்சயம் மீள்செலுத்தப்படுவது அவசியமாகிறது.
ஆனால், உரித்துடமை மூலதனம் என்பது, நிறுவனத்தின் உரிமையை பகிர்ந்துகொள்ளுவதன் மூலமாக, திரட்டிக்கொள்ளப்படுகின்ற மூலதனமாகும். இந்த மூலதனம், நிறுவனச் செயல்பாடுகளை இடைநிறுத்தாதவரை, மீளசெலுத்தவேண்டிய பொறுப்பினைப் பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை. உரிமை மூலதனமானது சிறு அலகுகளாக அல்லது பங்குகளாக பிரிக்கப்பட்டு பங்காளர்களான பொதுமக்களுக்கு பங்குசந்தை மூலமாக விநியோகம் செய்யப்படுவதன் மூலமாக திரட்டிக் கொள்ளப்படுகிறது. இதன்போது, பங்காளர்களாகிய பொதுமக்கள் நிறுவனத்தின் உரிமையைப் பெறுவதுடன், பங்கிலாபம், மூலதனலாபம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்களிக்குமுரிமை போன்ற பிற நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.
பங்குச்சந்தையில் எத்தகைய “பங்குகள்” உள்ளன?
பங்குகள் பொதுவாக உரித்துடமை மூலதனத்தை திரட்டும் நிதிமூலங்களாக உள்ளபோதிலும், அவற்றில் உள்ள பிரதிபலன்களின் அடிப்படையில் அவை வேறுபடுகின்றன.
சாதாரண பங்குகள் (Ordinary Shares) – பங்குகளின் வகையில் அதிஉச்சமான நன்மைகளைக் கொண்ட பங்குகளாக உள்ளன. இத்தகைய பங்கினை கொள்வனவு செய்யும் ஒருவர், நிறுவனத்தின் உரித்துடைய பங்காளராக மாற்றமடைவதுடன், பங்கிலாபத்தில் பங்குகொள்ளவும், நிறுவனத்தின் உரிமைகள் தொடர்பிலான தீர்மானக் கூட்டங்களில் பங்குகொள்ளவும் உரித்துடையவராக உள்ளார். ஆனால், நிறுவனத்தை மூடும் சந்தர்ப்பத்தில், நிறுவனத்தின் நிதிவளங்களை கொண்டு அனைத்துத்தரப்பினருக்கும் கொடுப்பனவை தீர்த்தபின்பே, தனது பங்குக்கான தீர்ப்பனவை பெறும் உரித்துடையவராக இருக்கிறார். இதுவொரு பிரதிகூலமாக உள்ளது.
வாக்குரிமையற்ற சாதாரண பங்குகள் (Non-Voted Ordinary Shares) – சாதாரண பங்குகளைப்போல, அனைத்து அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் கொண்டுள்ள பங்காக உள்ளபோதிலும். இத்தகைய பங்குதாரர்கள் நிறுவனத்தின் தீர்மானங்களில் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது. இந்தவொரு அம்சமே, இதனை சாதாரண பங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.
முன்னுரிமைப் பங்குகள் (Priority Shares) – நிறுவனம் இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே, சாதாரண பங்குரிமையாளர் பங்கிலாபத்தை பெற்றுக்கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளார். ஆனால், முன்னுரிமை பங்குதாரர்கள் உத்தரவாதம் அழைக்கப்பட்ட பங்கிலாபத்தை கொண்டுள்ள பங்குதாரர்கள் ஆவார்கள். எனவே, முன்னுரிமை அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின் பிரகாரம் நன்மைகளை அனுபவிப்பவர் என்பதால், இவர்களுக்கு வாக்குரிமையோ, தீர்மானக் கூட்டங்களில் பங்குகொள்ளும் உரிமையோ வழங்கப்படுவதில்லை. அதுபோல, நிறுவனத்தினை மூடுகின்ற சந்தர்ப்பம் வருகின்றபோது, சாதாரண பங்குதாரகளுக்கு முன்னதாகக் கொடுப்பனவு தீர்வு வழங்கப்படும் முன்னுரிமையை கொண்டிருப்பார்கள்.
பங்கு கொள்வனவிலும், பங்கு பரிவர்த்தனையிலும் கவனிக்க வேண்டியவை
பங்கு பன்முகபடுத்தலைக் கொண்டிருத்தல்
எவ்வித முதலீட்டிலும் அபாயநேர்வு (Risk) என்பது நிச்சயமாக இருக்கும். உதாரணமாக, வங்கியில் ஒரு குறித்த விகிதத்தில் நிலையான வைப்பைச் செய்த அடுத்த நாளே, வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பின், அதிகரித்த வட்டி விகிதத்தை நாம் இழக்க நேரிடும். அதுபோல, வணிகமுயற்சியில் இலாபத்தை எதிர்பார்த்து பணத்தினை முதலிடுகின்றபோது நட்டத்தை எதிர்கொள்ளவும் கூடும். எனவே, எத்தகைய முயற்சியாயினும் அபாயநேர்வை கருத்தில் கொள்ளுவது அவசியமாகிறது.
எனவே, பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றபோது, தனியே ஒரு நிறுவனத்தின் பங்குகளில் மாத்திரம் முதலீடுகளைச் செய்யாமல், அபாயநேர்வின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டியது அவசியமாகிறது. இலாபம் அதிகமாக உள்ள பங்குகளில், அபாயநேர்வும் அதிகமாகவே இருக்கும். எனவே, பங்குகளை பன்முகபடுத்தும் போது, அதிக, நடுத்தர மற்றும் குறைவான அபாயநேர்வுகளை கொண்ட நிறுவனப் பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்வது அவசியமாகிறது.
மூலதன வளர்ச்சி சலுகையை பெறுதல்
மூலதன இலாபம் அல்லது மூலதன வளர்ச்சி என்பது, ஒரு சொத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்கின்றபோது, அதன் பெறுமதியில் ஏற்படுகின்ற அதிகரிப்பாகும். அதுபோல, மிகச்சிறப்பாக செயல்படக்கூடிய நிறுவனத்தின் பங்குகளும், நீண்டகாலத்தில் அதன் நிதிநிலைமை, தொழிற்பாட்டு வளர்ச்சி, மூலோபாய நகர்வுகள் என்பவற்றின் அடிப்படையில் அதிகரிக்கும். இதன்போது, பங்குகளின் விலை அதிகரிப்பை அவதானத்துடன் நோக்கவேண்டும். அதிகரிக்கக்கூடியவாறே பங்கின் விலையும் குறைவடையக்கூடும். எனவே, இவற்றை அவதானித்து, பங்கின் விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்வோமாயின், மூலதன இலாபத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இம்முலதன இலாபமானது பங்கிலாப மீள்முதலீட்டு திட்டங்களுக்கு அடிப்படையாக அமையும்.
பங்கிலாப நன்மைகளை பெறுதல்
நிறுவன பங்குகளை கொள்வனவு செய்வதன் மூலம், நிறுவன நிதிநிலைமைக்கு பங்களிக்கும் பங்காளர்களுக்கு நிறுவன செயல்பாடுகள் மூலம் உழைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வெகுமதியாக அல்லது இலாபமாக பகிர்ந்தளிப்பதனையே பங்கிலாபம் என சொல்லலாம். இப்பங்கிலாபம் நிதியாண்டில் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், மூலோபாய திட்டங்கள் என்பனவற்றின் அடிப்படையிலும், நிதி ஸ்திரத்தன்மை அடிப்படையிலும் வழங்கப்படலாம். சந்தையில் தன்னை நிலைநிறுத்தியுள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு காலாண்டுக்கு அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை பங்கிலாபத்தை வழங்குகின்றன. எனவே, இத்தகைய பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்வதும் அவசியமாகிறது.
வரிச் சலுகைகள்
கொழும்பு பங்குச் சந்தையில் பரிமாற்றம் செய்யப்படுகின்ற பங்குகள் மூலமாக எழக்கூடிய மூலதன இலாபங்களுக்கு இலங்கையில் எவ்விதமான மூலதன இலாப வரியும் (Capital Gain Tax) அறவிடப்படுவதில்லை. மேலும், பங்குப்பரிவர்த்தனை தொடர்பில் எவ்விதமான பிடித்துவைத்தல் வரி (Withholding Tax) , முத்திரைத் தீர்வை (Stamp Duty) என்பனவும் அறவிடப்படுவதில்லை.
ஆனால், பங்குகளுக்கான பங்கிலாபங்கள் (Dividends) வழங்கப்படுகின்றபோது, அதற்கு 10% பிடித்துவைத்தல் வரி அறவிடப்படுவதுடன், இரண்டாம்தர பங்குச்சந்தையில் (Secondary Market) இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதியில் 0.3% பங்குக்கொடுக்கல் வாங்கல் தீர்வையாக அறவிடப்படுகிறது என்பதனைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
இவை அனைத்துமே, பங்கு சந்தையொன்றில் ஈடுபாட்டுடன் பங்குகொள்ள விரும்பும் பங்காளர்கள் அடிப்படையாக தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள் ஆகும். எவ்வாறு இலாபம் உழைக்கும் நோக்கமும், ஊக்கமும் உள்ளதோ, அதுபோல, அபாயநேர்வுகளையும் சந்திக்கக்கூடிய மனத்திறனைக் கொண்டிருத்தல் அவசியமாகும். அபாயநேர்வுகள் காரணமாக நட்டத்தைச் சந்திக்கின்றபோது, விரக்தியடைந்து பங்குச்சந்தையை விட்டு வெளியற எண்ணுவதனை விட, அத்தகைய நட்டங்கலிளிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, எவ்வாறு பங்குச்சந்தையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதனைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அடுத்தடுத்த வாரங்களில் பங்குச்சந்தை தொடர்பிலும், பங்கு பரிவரத்தனை தொடர்பிலும், நிறுவங்களின் பங்குகளை இனம்காணும் வழிமுறைகள் தொடர்பிலும் பார்க்கலாம்.