ஊடகங்கள் எனப்படுவது நம்மை சுற்றி நடக்கும் உண்மையை வெளிக்கொண்டு வரும் பணியில் இன்றியமையாத பங்களிப்பை செய்து வருகிறது. நிதர்சனத்தை வெளிக்கொண்டு வரும் பணியினால் தங்கள் இன்னுயிரை நீத்த/நீக்கடிக்கப்பட்ட மதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள் நம் வரலாறுகளில் ஏராளம் உள்ளனர். எந்தவொரு எல்லைக்கு சென்றேனும் உண்மையை அறியும் ஆவல் கொண்ட சில ஊடகவியலாளர்களின் செய்கைகள் சமயங்களில் நம்மை முகம் சுளிக்கவும், ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது. அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய அரச குடும்பத்தின் மிகப் பிரபலமான அங்கத்தவரான வேல்ஸ் இளவரசி டயானா அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பின்புலத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஏற்பாடுகள் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அரச குடும்பத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அந்த நேர்காணல் குறித்தும், அதன் பின்புலத்தில் நிகழ்ந்த நேர்மையற்ற அணுகுமுறைகள் குறித்தும் இந்த கட்டுரை தொடர் ஆராய்கிறது.
1995 நவம்பர் 20ம் திகதி மதிய நேரம், BBC1 தொலைக்காட்சி அலைவரிசையில் நிகழ்கால விவகாரங்களை கலந்துரையாடும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான Panorama வில் வெளியானது, வேல்ஸ் இளவரசி டயானா அவர்களின் நேர்காணல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 40% ஆனவர்கள் (23 மில்லியன் பார்வையாளர்கள்) அந்த தொலைக்காட்சி நேர்காணலை பார்த்தனர். ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதையுமே உலுக்கி எடுத்த டயானாவின் இந்த துணிச்சலான செவ்வியை தொகுத்து வழங்கியவர் மார்ட்டின் பஷீர் எனும் திறமையான ஊடகவியலாளர். சார்ல்ஸ்-டயானா தம்பதிகளின் பிரிவுக்கு பின்னர் டயானா தனியாக வழங்கிய மிக முக்கியமான செவ்வியாக இது அமைந்தது. தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை தன்னுடைய தரப்பில் இருந்து தெரிவித்தார் டயானா. அரச குடும்பத்தின் உறுப்பினராகவும், அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட வெளி நபராகவும் தான் எதிர்கொண்ட பல சவால்களையும் அவர் இந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார். அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட முக்கியமான விடயங்கள் குறித்து கீழே காண்போம்.
வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் பிறந்த போது டயானா கடுமையான பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தத்திற்கு (Postnatal Depression) தான் உள்ளானார் என்பதை தெரிவித்தார். இந்த காலப்பகுதியிலேயே தற்கொலை எண்ணம் தனக்கு அதிகளவு வந்ததாகவும், தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டது போன்ற எண்ணங்கள் வந்ததாகவும் அவர் கூறினார். மேற்கூறிய எந்த ஒரு எண்ணமும் தன்னடைய இயல்பான பாத்திரத்துக்கு முற்றிலும் எதிர்மறையான விடயங்களாக இருந்ததாகவும் அவர் கூறினார். சாதாரணமாகவே பிரசவத்துக்கு பின்னர் பத்தில் ஒரு பெண்ணுக்கு இவ்வாறான மன அழுத்தம் வருவது இயல்பாக இருந்த போதிலும், அரச குடும்பத்தில் இவ்வாறான பிரச்சினைகளை கொண்ட ஒருவர் முன்பு இருந்ததில்லை என்பதனால் டயானாவை புரிந்து கொண்டு, உதவக்கூடிய நபர்கள் எவரும் அரண்மனையில் இருக்கவில்லை. எனவே தன்னை நோக்கி பிறரின் அவதானத்தை ஈர்க்க தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் டயானா கூறினார். இதற்கு மேலதிகமாக புலிமியா (Bulimia) என்னும் வேறொரு உளரீதியான நோய் நிலைமையும் தனக்கு ஏற்பட்டதை டயானா கூறினார். புலிமியாவிற்கு ஆளாகும் நபர்கள் தங்களுடைய மன ஆறுதலுக்காக மிக அதிக அளவில் உணவு உட்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள், ஆனால் சிறிது நேரத்துக்குள்ளாகவே தங்களுடைய ஆரோக்கியம் குறித்த பயத்தின் காரணமாக உண்ட அனைத்தையும் வாந்தியெடுத்து விடுவார்கள். சுமார் 3 – 4 வருடங்களாக டயானா இந்த நோய் நிலைக்கு ஆளாகியிருந்தார். தன்னுடைய இந்த கடினமான நாட்களில் தன்னை தானே விரும்பவில்லை என்றும், பிறர் எவரிடமிருந்தும் பெரியளவு உதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிய டயானா, இந்த உளரீதியான அழுத்தங்கள் ஆரோக்கியமற்ற திருமண வாழ்க்கைக்கான அறிகுறிகள் என்றும் பதிவு செய்தார்.
சார்ல்ஸ் மற்றும் டயானா இருவரது ஆர்வங்களும் ஒன்றாக இருந்த போதிலும், டயானாவின் குறைந்தளவு கல்வித் தகைமையால் பிரித்தானிய ஊடகங்கள் அவரை “முட்டாள்” என்று சில சமயங்கள் வரையறை செய்தது. மேலும் டயானா உளரீதியான அளவில் மோசமாக இருந்த நாட்களில் “டயானா உளரீதியாக ஸ்திரமானவர் அல்ல” எனவும் ஊடகங்கள் செய்தி பரப்பின. இதில் வருத்ததுக்கு உரிய விடயம் என்னவென்றால் தான் உளரீதியாக அனைத்து நிலைமைகளில் இருந்து சீராகி வந்த பின்னரும் கூட தன்னை மன நோயாளி போன்றே ஊடகங்கள் நடத்தியதே என்பதாகும் என தன்னுடைய மன வருத்தத்தை தெரிவித்தார். ஒரு புறம் சில ஊடகங்கள் இவ்வாறு தன்னை கேலி செய்து கொண்டிருந்த வேளையில், வேறு சில ஊடகங்கள் தன்னை அதிகளவு புகழ்ந்ததாக கூறினார். சார்ல்ஸ்-டயானா தம்பதிகள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும், டயானாவே தலைப்பு செய்தியாக தோன்றினார். டயானாவின் புகழில் சார்ல்ஸ் பெரும்பாலும் மறைந்து போனார். இதன் காரணமாக ஒரு கட்டத்துக்கு பின்னர் சார்ல்ஸ் அரச நிகழ்ச்சிகளுக்கு தாம் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வதை புறக்கணித்ததோடு, தங்களுக்குள் வேலைகளை பங்கிட்டுக் கொண்டு தனித்தனியே செயற்பட தொடங்கியதாக டயானா கூறினார். தனக்கு அரச குடும்பத்தில் கிடைக்காத பாராட்டும், அங்கீகாரமும் ஊடகங்களில் கிடைத்தமையால் டயானாவும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இவ்வாறு சார்ல்ஸ்-டயானா உறவில் விரிசல் விழுவதில் பிரித்தானிய ஊடகங்கள் அளப்பரிய சேவையாற்றியமையை டயானா பதிவு செய்தார்.
இந்த நேர்காணலின் மிக முக்கிய தருணங்களாக அமைந்தது இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமீலா பார்க்கர் இருவருக்கும் இடையே இருந்த உறவு குறித்த டயானாவின் கருத்து. இது குறித்து டயானா பேசும் போது “இயல்பாகவே ஒரு பெண்ணுக்கு இருக்கும் உள்ளுணர்வின் விளைவாக சார்ல்ஸ் வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்க வாய்ப்புண்டு என நான் சந்தேகித்தேன்” என கூறினார். 1994 இல் ஜோனதன் டிம்பல்பீ உடனான தொலைக்காட்சி நேர்காணலில் இளவரசர் சார்ல்ஸ் தான் கமீலா உடன் 1986 இல் இருந்தே தொடர்பில் இருப்பதை தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய திருமண வாழ்வு குறித்து தொகுப்பாளர் கேட்கையில் “எங்கள் திருமணத்தில் மூன்று பேர் உள்ளோம், எனவே கொஞ்சம் நெரிசலாகத்தான் இருக்கிறது” என டயானா பதிலளித்தார். தங்கள் திருமண உறவு விவாகரத்து நோக்கி நகர்ந்தமைக்கு விருப்பம் தெரிவித்தவர் சார்ல்ஸ் தான் என டயானா கூறினார். அவர்களுடைய பிரிவு குறித்து உத்தியோக பூர்வமாக வானொலி அறிவிப்பு வெளியான போது ஒரு ஃப்யாரி டேல் முடிவுக்கு வந்தது போல தான் உணர்ந்ததை நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் டயானா. இந்த செவ்வியில் அரசர் பதவிக்கு சார்ல்ஸ் எந்தளவு பொருந்துவார் என்பது குறித்து கருத்து தெரிவித்ததுடன், தனக்கு ஜேம்ஸ் ஹேவிட் எனும் முன்னாள் அரச குதிரை படையணி அதிகாரியுடன் தனக்கு இருந்த உறவு குறித்தும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இந்த நேர்காணல் வெளியாகிய நேரம் முழு ஐக்கிய ராஜ்ஜியமுமே இரு அணிகளாக பிரிந்து ஒருவரோடொருவர் வாதிட்டு கொண்டனர். அரச குடும்பத்தவர்கள், மற்றும் அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், பெரும்பாலான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பழமைவாதிகள், அரச குடும்ப விசுவாசிகள் என அனைவரும் டயானாவின் இந்த செய்கையால் பெரும் அதிருப்தி அடைந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பிபிசி நிறுவனத்துக்கு எதிராகவும் கண்டனக்குரலை உயர்த்தினர். டயானாவின் பிறந்த வீட்டினாரான ஸ்பென்சர் குடும்பத்தவர்களும் டயானாவின் இந்த செய்கையால் அவருடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டனர். ஆனால் பொதுமக்களில் பலர், அதிலும் குறிப்பாக இளைய சமுதாயம் டயானாவின் இந்த செயலுக்கு ஏகபோக ஆதரவை வழங்கினர். அவர்களுடைய ஆதரவுக்கு முன்பாக எழுந்த எதிர்ப்புக்கள் எல்லாம் காணாமல் போயின. இந்த நேர்காணல் ஒளிபரப்பாகிய பின்னரே இவ்வாறு ஒரு நிகழ்ச்சி படமாக்கப்பட்டது குறித்து பக்கிங்காம் அரண்மனைக்கும், பிபிசி இன் தலைமை அதிகாரி மர்மடியுக் ஔசிக்கும் எந்தவொரு தகவலும் தெரியாது என்பது தெரிய வந்தது. இவ்வளவு ரகசியமாக ஒரு நேர்காணல் நடைபெற காரணம் என்ன? இந்த நேர்காணல் அரச குடும்பத்தில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? என்பது குறித்து அடுத்த பாகத்தில் ஆராய்வோம்.