இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியரின் ஆட்சியின் கீழ்தான் இலங்கை இருந்தது. அதனால் பிரித்தானிய போர் திட்டங்களில் இலங்கை முக்கிய பங்கு வகித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இராணுவத் தலைமையகம் 1942ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நிலப்பரப்பில்தான் அமைந்திருந்திருந்தது. இந்தத் தலைமையகத்தை ஜப்பான் ஆக்கிரமித்தபின்னர், இலங்கைக்கு அதாவது அப்போதைய சிலோனுக்கு பிரித்தானியர்களின் இராணுவத் தலைமையகம் மாற்றப்பட்டாதால் ஜப்பானின் இலக்காக மாறியது இலங்கை. ஆனால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
உலக மகா யுத்தத்தில் பிரித்தானியர்கள் முழு மூச்சில் ஈடுபட்டிருந்தாலும் யுத்தத்தின் வேகத்துடன் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையின் கடமைகளைப் புறக்கணிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள பிரித்தானிய காலனிகளில் வசிக்கும் அவர்களின் இராஜதந்திரிகளுக்கான கடிதங்கள் மற்றும் உறவினர்களுக்கான கடிதங்களை வழங்க பிரிட்டிஷ் ரோயல் மெயில் எனும் தந்திச்சேவை எப்போதும் போல் செயற்பட்டு வந்தது.
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த அவுஸ்திரேலியாவுடன், சிங்கப்பூர் மெயில் தொடர்புகளைப் பேணி வந்தது. அதன்பிறகு ஜப்பான் சிங்கப்பூரை ஆக்கிரமித்தபின்னர் இந்த மெயில் சேவைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவுடனான அனைத்து உறவுகளையும் சிங்கப்பூர் ஊடாகத்தான் ஆங்கிலேயர்கள் பேணி வந்தனர். இதில் கடல் வழி அஞ்சல் மற்றும் விமான அஞ்சல் ஆகியவை இவ்விரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய தொடர்பாடல் முறையாக இருந்தது. பின்னர் சிங்கப்பூர் வீழ்ச்சியடைந்ததுடன் இந்த தொடர்பாடல் முறைமைகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. இதனால் பெரும் சிக்கலுக்குள்ளான ஆங்கிலேயர்கள், அவுஸ்திரேலியாவுடனான தொடர்பை பேண புதியதொரு வழியை யோசித்தனர்.
இதற்கு தீர்வுகாண பல வழிகளை ஆங்கிலேய அதிகாரிகள் முன்மொழிந்தாலும், விமான அஞ்சலைத்தான் அப்போதைய ஆட்சியாளர்கள் விரும்பியுள்ளனர். அதனால் இலங்கை கொக்கலையில் அமைந்திருந்த பிரித்தானியரின் இராணுவ தளத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஒரு விமானத்தை அஞ்சல் சேவைக்காக பறக்கவிட வேண்டும் என முடிவெடுத்தனர்.
முன்னதாக கராச்சி ஊடாக இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானங்கள் ஜப்பானின் படையெடுப்புடன் முடக்கிவிடப்பட்டது. அதனால் கராச்சிக்கு பதிலாக அதனை காலி முதல் பேர்த் வரை நேரடி விமானமாக பறக்கவிட வேண்டுமென ஆங்கிலேயர் திடடமிட்டனர். அவுஸ்திரேலியாவின் விமான நிறுவனமான குவாண்டாஸ் எம்பயர் எயர்வேஸ் எனும் விமான நிறுவனத்தை இந்தப் பணிக்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். காரணம் எயர் மெயில் ஒரு சிவிலியன் விமான நிறுவனத்தினால் செய்யப்படவேண்டும் என்பதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி போர் சமயத்தில் இராணு விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. அதனால் சிவில் விமானமொன்றை அஞ்சல் விமானமாக பறக்கவிட்டனர். ஏனென்றால் யுத்த சட்டத்திட்டங்களின்படி சிவில் விமானங்களுக்கு தாக்குல் நடத்த முடியாது என்பதினால் தான்.
அவுஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் எயார்லைன்ஸ் மற்றும் ரோயல் விமானப்படை ஆகியவற்றுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களால் விமான உறவை ஆரம்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஸ்வான் ஆற்றிலிருந்து இலங்கையின் கொக்கலை ஏரிக்கும், கொக்கலவிலிருந்து ஸ்வான் நதிக்கும் இடையில் விமானத்தை பறக்கவிடுவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பயணத்திற்கு வானிலும் அதேபோல் நீரிலும் செயற்படக்கூடிய ஒரு விமானத்தை தேர்ந்தெடுத்தனர். அது ‘கேடலினா’ என்ற விமானமாகும். இதனை ‘பறக்கும் படகு’ என்ற பெயராலும் அழைத்தனர். எந்தவொரு கடினமான பயணத்திற்கும் இந்த கேட்டலினா விமானம் ஏற்றது என்று அப்போதைய விமான வல்லுநர்களால் பெரும் பாராட்டைப் பெற்ற விமானமாக இது கருதப்பட்டது.
இந்த முடிவை எட்டிய பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்த 19 கேடலினா விமானங்களில் ஐந்து விமானங்கள் கொக்கல – அவுஸ்திரேலியாவுக்கிடையிலான விமான சேவைக்காகக் கொண்டுவரப்பட்டது. இந்த விமானப் பயணமானது மொத்தம் 28 மணியத்தியாலங்களாகும். ஆனால் எங்த விமான நிலையத்திலும் இடைநிறுத்தாது கொக்கலையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடைவிடாது பறந்துள்ளது. இந்தப் பயணமானது புதுமையானதாகவும் ஆபத்து மிக்கதாகவும் அப்போது பார்க்கப்பட்டுள்ளது.
இயற்கையால் சூழப்பட்ட இந்தியப் பெருங்கடல் நீர்முனையில் ஒரே ஒடுபாதையில் 28 மணிரேம் பறந்த இந்த விமானம், அப்போது பசுபிக் பெருங்கடல் பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஜப்பானிய கடற்படைக்கும் விமானப்படைக்கும் தெரியாமல் பயணிப்பது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அச்சம் தரக்கூடிய பயணமாகவும் இது அமைத்துள்ளது. ஆனாலும் இந்த கடினமான விமானப்பணத்தை ஆங்கிலேயர்கள் கைவிடவில்லை. இந்தப் பயணத்தின் தூரம் 3500 மைல்களாக அதாவது 5652 கிலோமீட்டராக அமைந்திருந்தது. இன்றுவரையில் கேடலினா விமானம் போன்று இடைவிடாது 28 மணித்தியாலங்கள் எந்த விமானமும் பயணம் செய்யவில்லை. அதனால் இலங்கை – அவுஸ்திரேலிய விமானப் பயணமானது இன்றுவரை சாதனைப் பயணமாகவே பார்க்கப்படுகின்றது.
கடல்பரப்பின் பெரும்பகுதி ஜப்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் ஜப்பான் கடற்படைக்கு பயந்து இந்த விமானமானது இரவு நேரங்களில்தான் ஜப்பானிய ஆதிக்க கடல்பரப்பைக் கடக்குமாம். அவுஸ்திரேலியாவின் நோர்ட்லேண்டிலிருந்து முதலாவது விமானமான ‘ஒல்டயர் ஸ்டார்’ விமானம் கொக்கலையிற்கு 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வந்திறங்கியது. அந்த விமானத்தின் விமானியாக சரித்திரத்தில் பதியப்பெற்றவர் ஸ்கோட்ரன் லீடர் ரம்போல்ட் என்பவர்தான். ஆனாலும் இந்த விமான சேவைக்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டார் கேப்டன் ரஸ்ஸல்.
அப்போது ஒரு வருடத்திற்கு 5 கேட்டலினா விமானங்கள் கொக்கலையிற்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பறந்துள்ளன. ஐந்து அதிகாரிகளைத் தவிர்த்து அந்த விமானத்தில் மொத்தம் மூன்று பயணிகள்தான் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கு 65 கிலோ கிராம் வரையான பொருட்களை கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்ததாம்.
கொக்கலை – பேர்த் சிறப்பு அஞ்சல் சேவை விமாணம் மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்துள்ளதாகவும் காற்றின் வேகத்தைப் பொறுத்து வேகம் குறையலாம் கூடலாம் என்றும் ஆனாலும் பயண நேரம் 28 மணித்தியாலளங்களுக்கு குறையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படியாக பயணம் செய்த விமானச் சேவையானது உலகப் போர் நிறைவடைந்ததும் 1945 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி நிறுத்தப்பட்டது. கேட்டலினா விமானசேவை இயங்கிய காலப்பகுதிக்குள் மொத்தம் 271 தடவை விமானங்கள் பறந்துள்ளன.இந்த சேவையின் போது இந்த விமானங்களில் மொத்தம் 648 பயணிகளும் இந்த விமானங்கள் மொத்தமாக 1.5 மில்லியன் kmகள் தூரத்திற்கும் பறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் இந்த விமான சேவைக்கு கேட்லினா விமானங்களுக்கு மேலதிகமாக அவ்ரோ மற்றும் லங்கெஸ்டர் போன்ற விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரீகல் ஸ்டார், ஸ்பைகர் ஸ்டார், ஒல்டெயர் ஸ்டார், வேகா ஸ்டார், அண்டரஸ் ஸ்டார் ஆகிய விமானங்களே இந்த சேவையில் இணைத்துக் கொண்டதாக சொல்லப்படுகின்றது.
இந்தப் பயணத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்தது உணவுதான். காரணம் 28 மணித்தியாலங்கள் விமானத்தில் பயணம் செய்வோருக்கு எந்த மாதிரியான உணவு வகைகள் கொடுப்பது என்பதிலும் அதனை தேர்ந்தெடுப்பதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கு பழங்கள், முன்னதாக சமைக்கப்பட்டு குளூரூட்டப்பட்ட உணவுகள், கோழி இறைச்சி சன்ட்விச், சிறிய கேக் வகைகள் மற்றும் சிறிய போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்மையான தேநீர் அல்லது காப்பி ஆகியவை விமான பயணத்தின் போது உணவுகளாக வழங்கப்பட்டுள்ளது. கொக்கலை – அவுஸ்திரேலியாவுக்குப் பறந்த இந்த விமான சேவைக்கு ‘ஒப்பரேஷன் டபல் சைன் ரைஸ்’ (The Double Sunrise) என்று பெயரிடப்பட்டது. இதற்குக் காரணம் 28 மணித்தியாலயங்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது இரண்டு முறை சூரிய உதயத்தை காணமுடியும் என்பதால் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.
28 மணித்தியாலத்தில் இரண்டு முறை சூரிய உதயத்தை காணக்கிடைப்பது மனித வாழ்வில் மிகப்பெரிய ஒரு அதிசயம் தான் என்பதனால் இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிக்களுக்கு விசேடமானதொரு சான்றிதழ் பத்திரிமும் விமான சேவை அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது.
1936 ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3305 கேடலினா விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 2661 விமானங்களை அமெரிக்காவும் 24 விமானங்களை சோவியத் யூனியனும் தயாரித்துள்ளன.
இன்றும் சேவையில் இருக்கும் குவாண்டாஸின் விமான நிறுவனத்தின் கங்காருச் சின்னம் முதன்முதலி 1945ஆம் ஆண்டு கேடலினா விமானத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேட்டலினா விமானம் பற்றியும், கொக்கலை பேர்த் விமான சேவை பற்றியுமான சுவாரஷ்யமான தகவல்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இந்த விமானப் பயணம் தொடரும்…