மறைந்து வரும் கைத்தறி சத்தம் – சென்னிமலை

மனிதன் நாகரிகம் அடைய தொடங்கியவுடன் தன் உடலை மறைக்க ஆடைகளை அணியத் தொடங்கினான். அன்று தொடங்கிய இந்த ஆடை கலாச்சாரம், மென்மேலும், மனிதர்களின் தேவைக்கு ஏற்ப, புதுப்புது வடிவம் பெற்று வருகிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் இருக்கின்ற தனித்தன்மை போல தனக்கென்று தனி சிறப்பும் தொன்மையும் கொண்டது இந்திய ஆடை கலாச்சரம். அயல் நாட்டினர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு நம் ஆடை கலாச்சாரம் தனி தன்மை கொண்டவை.

ஆடை உற்பத்தி முறைகள்

மனிதர்கள் ஆரம்ப காலகட்டத்திலிருந்து ஆடை உற்பத்தி செய்ய பல முறைகளை பயன்படுத்தினார்கள். அதற்கு பின் கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் தொன்மை வாய்ந்த ஆடை உற்பத்தி முறைகளில் ஒன்று கைத்தறி நெசவு. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய தொழில் கைத்தறி நெசவு.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கைத்தறி நெசவுக்கு சிறப்புமிக்கது. காஞ்சிபுரம். அதுமட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, சேலம்,கடலூர் ஆரணி ஆகிய மாவட்டங்களிலும் கைத்தறி நெசவு செய்யப்படுகிறது. இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையின் கைத்தறி நெசவு தொழில் பற்றி.ஈரோடில் இருந்து 27 கிலோமீட்டரில் ஆமைந்துள்ளது சென்னிமலை.

Weaving (Pic: ignant)

சென்னிமலையில் நெசவு

சென்னிமலை நெசவில் தனிச்சிறப்பு வாய்ந்தவை சென்னிமலை போர்வை.இங்கு உற்பத்தி செய்யும் போர்வைகள் குறைந்த பச்சம் பத்து வருடங்களுக்கு உழைக்கும்.முறுக்கு நூல் என்ற நூலில் தயாரிக்கப்படும் போர்வைகள் ,60 நீளத்திற்கு 90 அகலம் இல்லையெனில் 50 நீளத்திற்கு 90 அகலம் என்ற செண்டிமீட்டர் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னிமலை மிக அழகிய ஊர். சென்னிமலையின் பிரதான தொழில் கைத்தறி நெசவு. சென்னிமலை அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். .சில வருடங்களுக்கு முன்பு சென்னிமலையில் எந்தவொரு வீதியினுள் நுழைந்தாலும் தடக் தடக் என்று கைத்தறி சத்தம் கேட்டுகொண்டிருக்கும். அந்த ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்  தடக் தடக் என்ற அந்த சத்தம் தான் ராஜா சார் இசை போன்றதொரு ஆனந்த கீர்த்தனை.

இந்தியாவிலேயே 50 சதவீத போர்வை உற்பத்தி  இங்கு செய்யப்பட்ட காலமும் உண்டு. சென்னிமலை கைத்தறி போர்வைக்கென்றே தனி சிறப்பு உண்டு.தோராயமாக இருபத்தி ஐந்தயிரம் நபர்கள் கைத்தறி நெசவு செய்து கொண்டிருந்த காலம் அது. மேலும்  இவர்கள் நூல் நூற்க ,பாவு தேய்க்க, இனைக்க, பாவு சட்டம், ரகம்பிரித்தல் என பிரித்து வேலைகளை செய்வர். இவர்களின் குடும்பங்களுக்காகவே அங்கு டீக்கடைகள், மளிகைக் கடைகள் போன்ற பல அத்தியாவசிய தொழில்களும் தோன்றி பல குடும்பங்களை வாழ வைத்தது எனலாம். தடக் தடக் என்ற கைத்தறி சத்தம் கேட்டு கொண்டுடிருந்த ஊர் இன்று எந்த கைத்தறி இயந்திரத்தின் சத்தமும் ஒலிக்காமல், பசியில் வாடும் மனிதர்களின் கூவல் மட்டுமே ஒலிக்கின்றது.

Weaving Thread (Pic: medium)

கூட்டுறவு சங்கங்கள்

சுமார் 50 வருடங்களுக்கு முன் நெசவாளர்கள் தனித்தனி குழுவாக சேர்ந்து தங்களுக்கென கூட்டுறவு சங்கங்களை  தொடங்கினார்கள். நெசவு செய்து உற்பத்தியான  ஆடைகளை அவர்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ,அரசுதொழிற்கூடங்களுக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்வார்கள். ஆரம்ப கட்டத்தில் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் M.P. நாச்சிமுத்து அவர்கள்.அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு சற்று பரிட்சையமான நபர் நாச்சிமுத்து. சென்னிமலைக்கு ஒரு முறை நெசவை பார்வையிட வந்திருக்கிறார் குடியரசுத் தலைவர். அவ்வளவு பெரிய கவனம் கொண்டிருந்த  சென்னிமலை என்கின்ற ஊரின் நிலை இப்போது நிலை தடுமாறி இருக்கிறது என்பது வருந்தத் தக்க ஒன்று.

2000 ஆவது ஆண்டில் தொடங்கி  கைத்தறி நெசவு தொழில் படிப்படியாக தொய்வடையத் தொடங்கி இன்னும் சில ஆண்டுகளில் நிராகதியாக ஆகும் நிலையில் உள்ளது. இதற்கு கூட்டுறவு சங்கத்தின் மேல்மட்ட பணியாளர்கள் காரணம் என்று நெசவாளர்கள் கூறுகின்றனர். ஒரு கூட்டுறவு சங்கம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனுமதி பெற்று அதன் கீழ் இயங்குகிறுது என்றால்,ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் சார்பில் மான்யம் அளிக்கபடும். அப்படி வழங்கப்படும் மான்யத்தை, மேல்மட்ட நிர்வாகிகள் வைத்து கொண்டு வெறும் நெசவு கூலியை மட்டும் கொடுத்துவிட்டு “ஊக்கத்தொகை” என்ற பெயரில் நெசவாளர்களை சமாதானம் செய்துவிடுகிறார்கள். ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு தோரயமாக 400 ரூபாய்க்கு தற்போது நெசவு செய்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் , உற்பத்தி செலவை சேர்த்து இறுதியில் அவர்களுக்கு 300 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால் இதே உற்பத்தியை அரசாங்கம் கொடுக்கும் மான்யத்தை சேர்த்தால் 600 ரூபாய் கிடைக்கும். அதாவது இரட்டிப்பாக உயரும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மான்யத்தை மேல்மட்ட நிர்வாகிகளே எடுத்துகொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை போன்ற நெறி தவறிய வணிக முறை சரியான நிர்வாகி அமையாததால் நடைபெறுகிறது. அவர்கள் முதலீடு செய்வதிலே பாதி தான் கிடைப்பதாக கூறுகின்றனர் கைத்தறி நெசவாளர்கள். இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் நெசவாளர்களின் கண்ணீர் கதைகள் ஊடகங்களின் பார்வைக்கும் படாமல் இருப்பது வேடிக்கையான ஒன்று.

Weaving (Pic: lifeandshades)

இன்றைய நிலை

இதனால் சுயமாக நெசவுத் தொழிலை முதலீடு செய்து ஆடைகளை சொந்தமாக உற்பத்தி செய்து வந்த சென்னிமலை நெசவாளர்களில் பலர்  திருப்பூர் பணியன் கம்பெனிகளுக்கும், சிப்காட்டுக்கும் கூலித் தொழிலாகியாக சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை. இதை போன்று வெளியூருக்கு சென்று பணியன் கம்பெணிகளுக்கு செல்லும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். இப்படி தற்சார்பாக இயங்கிக் கொண்டிருந்த நெசவு தொழிலாளர்களை தினக்கூலிகளாக மாற்றிய சாதனையும் நெறி தவறி பணியாற்றும் நிர்வாகிகளைச் சாரும்.

நான்கு வருடம் முன்பு கைத்தறி கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனராக மாநில அளவில் “சகாயம் ஐ. ஏ. எஸ்’’ நியமிக்கப்பட்டார்.

அவர் கூட்டுறவு இயக்குனராக இருந்தபோது அனைத்து நெசவாளர்களையும் கூட்டி ,அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கேற்ப உற்பத்திக்கான மொத்த செலவும், கூட்டுறவு சங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, ஏழுதப்படாத சட்டம் போன்றதொரு நடைமுறையை கொண்டு வந்தார். சகயாம் ஐ.ஏ.எஸ் தலைமையில் கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகளை கோ – ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது. அவர் சிறப்பாக பணியாற்றியபோதும் பதினேழே மாதங்களில் கோ – ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, கைத்தறி சேலை மற்றும் துணிகளை தயாரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால் 2013 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூ 2.25 கோடி. அதில் ஒரு கோடியைக் கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க நடவடிக்கை எடுத்தார். இது நெசவாளர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நடைமுறையால் தான் இன்றைக்கும் சில நெசவுத் தொழிலாளர்கள் தனது தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் எட்டே மாதங்களில்  வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு கோ-ஆப்டெக்ஸில் என்ன நடந்தது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

Sahayam I A S (Pic: youtube)

கைத்தறியா? விசைத்தறியா?

இன்றைக்கு கைத்தறி நெசவுத்தொழில் என்று நம் வாங்கி அணியும் ஆடைகள்,பெரும்பாலும் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ஆடைகளே. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடையை ,கைத்தறியில் உற்பத்தி செய்தது போல் காட்டி விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல் ,விசைத்தறியின் உற்பத்தியை காட்டி கைத்தறிக்கான ஆரசாங்க மான்யத்தை பெற்றுக்கொள்கிறார்கள் சிலர்.

விசைத்தறியில் உற்பத்தி செலவு குறைவு, மேலும் உற்பத்தி செய்த ஆடையின் தரமும் சிறந்தது என்ற ஒரு பிரக்ஞையை மக்கள் மத்தியில் உருவாக்கியும் உள்ளனர். கைத்தறிப் போர்வை பத்து வருடங்களுக்கு உழைக்கும் என்றால் விசைத்தறி போர்வை ஒரிரு வருடம் மட்டுமே உழைக்கும். இதன் வேறுபாட்டினை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு நுகர்வோரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது நுகர்வோருக்கு மட்டுமல்லாது, சிறு தொழில் முனைவோருக்கும் நன்மை பயக்கும்.

Girl Weaves (Pic: youtube)

அரசின் துணை

அரசாங்கமும் கைத்தறி சங்கமும் இணைந்து 2003 ல் சென்னிமலை பகுதியில் ஆயிரம் வீடுகள் நெசவு தொழிலாளர்களுக்கு கட்டி கொடுத்திருக்கிறார்கள்.இதற்கு ஆயிரத்தி பத்து காலனி என்று பெயர்.

கூட்டுறவு சங்கங்கள் முறையாக செயல்பட்டால் .அரசாங்கம் தரும் மான்யங்கள் நெசவாளார்கள் கைக்கு முறையாக  சென்றடையும். இலவசங்களைத் தவிர்த்து மக்கள் வாழ்வதற்கு ஏதுவான திட்டத்தை வகுப்பது தான் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை.

 நம் நாட்டில் விவசாயத்தை போல் கைத்தறி நெசவு அழிந்து கொண்டே வருகின்ற நிலையை நினைத்துப் பார்க்கையில் கைத்தறியைப்ற்றி காந்தி கூறியது என் நினைவிற்கு வருகிறது

‘’ அன்பும், தூய்மையும் இருக்கும் இடத்தில் தான்  கடவுள் இருப்பதாக நான் நம்புகிறேன். நான் சக்கரத்தில் இழைக்கும் ஒவ்வொரு நூலிலும் கடவுளைக் காண்கிறேன்’’.

 இன்று காந்திகிராம் கடைகளில் கூட கைத்தறியினால் நெசவு செய்த ஆடைகள் கிடைப்பதில்லை. எனக்கு ஒரு அச்சம் ஏற்படுகிறது காந்தியுடன் கைத்தறியும் அழிந்துவிட்டதோ என்று…வரும் காலங்களில் நெசவாளர்களின் குழந்தைகள் கூட  கைத்தறியை கண்காட்சியில் தான் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று…..

Weaving Family (Pic: hiveminer)

எனது அச்சம் நியாயம் என்று கருதினால்  நெசவு தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற உங்களுக்கு தோன்றும்  ஆலோசனைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். கைத்தறி ஆடைகளை வாங்கி அணியவும் விருப்பம் காட்ட வேண்டுகிறேன். குறிப்பு போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்.

Web Title: Linen Weaving and Its Business

Featured Image Credit: flickr

Related Articles

Exit mobile version