Asymptomatic | அகில உலக பிரச்சினையாகியுள்ள அறிகுறியற்ற வைரஸ் பாதிப்பின் நன்மையும் தீமையும்

நோய் அறிகுறிகள் வெளியில் தெரியாத நபர்களை மருத்துவ உலகில் asymptomatic carriers என்பர். அறிகுறியற்ற காவிகள் என்பது இதன் பொருள். இன்று உலகின் பொதுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கொரொனா வைரஸால் தலையை பிய்த்துக்கொள்ளும் உலக நாடுகளுக்கு உருவாகியிருக்கும் புதிய தலைவலி இதுதான்.

 பட உதவி: twitter.com/CNBCTV18Live

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் அறிகுறியற்ற நபர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் அவர்களில் ஏராளமானோர் சமுகத்தின் எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

கவனிக்கபடவேண்டியது

கொரோனா வைரஸின் அறிகுறியற்ற நோயாளர்கள் அதிகமாகினால், நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறையும். ஆனால் அறிகுறியற்ற நபர்கள் வைரஸ் தொற்று தன்னிடம் இருப்பது தெரியாமல் இருக்கும் காரணத்தால் வைரஸின் பரவலைத் தடுப்பது தொடர்பான புதுவிதமான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றனர்.

முக்கியமானது

வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிய எடுக்கப்படும் முயற்சிகளில் நம்பகமான PCR பரிசோதனைகள் அதிகளவில் செய்யப்படும் போதுதான் வெளிப்படையான ஒரு தீர்மானத்திற்கு நம்மால் வரமுடியும். அவ்வாறான பரவலான பரிசோதனைகளின் மூலமே asymptomatic நபர்களை இனம்காணலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • “இலங்கையில் இதுவரை தொற்றுடையவர்கள் என பரிசோதனை மூலம் பதிவானவர்களுள் மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் asymptomatic நபர்கள். இவ்வாறான அதிக asymptomatic பிரிவினர் எம்மிடையே இருந்தமை கண்டறியப்பட்டமைக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவிலான பரிசோதனைகள் செய்தமை காரணமாக இருக்கலாம். அதேசமயம் இலங்கை இராணுவம், காவல்துறையினர், பிற படைகளின் உதவியுடன் தனிமைப்படுத்தல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டமையும், தொடர்பு வைத்திருந்தவர்கள் கண்டறியப்படமையும் காரணமாக இருக்கலாம்” என வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற COVID-19 குறித்த சர்வதேச வெபினாரில் உரையாற்றிய தொற்று நோய்களுக்கான ஸ்தாபகத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr.ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்திருந்தார்.

ஒருவகையில் அறிகுறியற்ற காவிகள் அதிகளவில் நம்மிடையே உலவுகின்றனர் என வைத்துக்கொண்டால், இந்தப் பத்தியை எழுதும் நானோ அல்லது வாசிக்கும் நீங்களோ கூட அத்தகைய asymptomatic carriersஇன் அங்கமாக இருக்கலாம். வைரஸ் தொற்று இருந்தாலுமே கூட நாம் அவற்றின் அறிகுறிகள் இன்றி வலம் வரலாம் என்பது தான் நிஜம்.

மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் கூட்டம் அதிகரிக்காமல் போகலாம் என்பதை தவிர இதில் நன்மை எனக் கருத வேறொன்றும் இல்லைதான்.

பட உதவி: hrw.org/

நாங்கள் வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், அது நாடு முழுவதும் ஒப்பீட்டளவில் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.  அறிகுறியற்ற விகிதம் அதிகரிக்க அதிகரிக்க இறப்பு விகிதம் குறைந்த அளவில் இருக்கும் – அதுவொன்றுதான் சிறிய ஆறுதல்.

ஆனால்: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கும் பிரயத்தனங்களுக்கு இது மிகவும் மோசமான செய்தி.

  • குறித்த சர்வதேச வெபினாரில், மோசமான நிலையிலுள்ள நோயாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், Dr. ஜெயவிக்ரம “ அறிகுறிகள் காட்டும் நோயாளர்களில் இலங்கையில் மோசமான நிலையிலுள்ள பதினாறு பேர் மட்டுமே இனம்காணப்பட்டனர். அவர்களில் 7 நோயாளர்கள் மரணத்தை தழுவினர். அந்த ஏழு பேரில் ஒருவர் மாத்திரம் அனுமதியின் போது மரணித்தவர், மற்றொருவர் சில மணித்தியாளங்களில் மரணத்தை தழுவினார். மற்ற ஐவரும் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தவர்கள்.” என்றார்.

வைரஸ் தொற்றுள்ளவர்களை கண்டறியப்படாமல் விட்டால்; அல்லது, அறிகுறியற்ற நபர்கள் எம்மிடையே அதிகளவில் இருந்தால், வைரஸ் நாம் நினைத்ததை விட வேகமாக பரவலாம் என்பது தெளிவாகின்றது.

இது மேலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வழக்கமான சூழலுக்கு வரும் நிலையில் வைரஸைக் கண்காணிக்கும் நடவடிக்கையை கடினமாக்கலாம்.  மக்கள் அதிகளவில் கூடும் வைத்தியசாலை, பொதுச் சந்தை, சூப்பர் மார்க்கட்டுகள், உணவகங்கள் என்பவை முறையாக கண்காணிப்படவேண்டும். வேலைத்தளங்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தமது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழியுறத்த வேண்டும்.

தொடர்ந்தும், உலக சுகாதார ஸ்தாபகம், நம் நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதார கண்காணிப்பு அமைப்புகள் வெளியிடும் தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை சரிவர அவதானித்து ஒத்துழைப்பு வழங்க அனைவரும் ஒன்றிணைவோம்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்திடவும், மக்கம் சகஜ நிலைக்கு திரும்பவும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது 100% பங்களிப்பினை வழங்கவேண்டும் என்பதே இப்போதைக்கு நாம் சொல்லக்கூடியது.

Related Articles

Exit mobile version