அனிதாவின் மரணத்திற்கு உகந்த பதில் சொல்ல இயலாத அரசு தானே இது. மறதி ஒரு தேசிய வியாதி. மக்கள் மறந்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினர். நாமும் வேறு பிரச்சனைகளைப் பேசி, அனிதா பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம். அனிதாவின் குடும்பத்திற்கு வெவ்வேறு கட்சியினர் அவர்களாக முன் வந்து சிறு சிறு தொகையை வழங்கி, அதனையும் செய்தியாக்கி புகைப்படங்களுக்கு நின்றுவிட்டு சென்றுவிட்டனர். அரசும் அனிதாவின் குடும்பத்தில் ஒருத்தருக்கு அரசு வேலை தர முன்வருவதாக அறிவித்தது. ஆனால் அனிதாவின் கதை மட்டுமே பெரிதாக ஊடகத்தின் வழியே நமக்கு தெரிந்ததே தவிற்த்து. சென்ற ஆண்டு நீட் தேர்வு விவகாரங்களால் எத்தனை மாணவர்களது கனவும், வாழ்க்கையும், உயிரும் உருக்குளைந்தது என்பது ஊடகங்களுக்கே தெரியாத ஒன்று.
நீட் 2018
வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி இந்தியா நீட் தேர்வு நடக்க இருக்கிறது. இந்தியாவில் ம்ருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வு தான் அது. கடந்த வருடம் நீட் தேர்வு நடத்த தேர்வுக்குழு நியமித்த உழியர்கள் கடமை என்கின்ற பெயரில் செய்த வேடிக்கையான நிகழ்வுகளும், நீட் தேர்வு நடைமுறையை ஒட்டிய சர்ச்சையும் நம்மால் மறக்க முடியாது. சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு தயாராக பயன்படும் சிறப்பு பயிற்சி ஏற்பாடுகள் யாரும் செய்து கொடுத்ததாக தெரியவில்லை. சென்ற வருடமும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் கேள்வித்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்ததால் சிரமமாக இருந்ததாக தெரிவித்த ஞாபகம். இந்த வருடம் தமிழில் கேள்வித்தாள் நிச்சயம் இருக்கும் என்றால் மகிழ்ச்சி. ஆனால் இந்த வருடம் தமிழகத்தை சார்ந்த சில மாணவர்களுக்கு தேர்வு மையம், தெலுங்கானா, கேரளா மற்றும் இராஜஸ்தான் போன்ற வேறு மாநிலங்களில் நியமித்திருக்கின்றனர். ஆங்கிலமும் சரியாக தெரியாமல், இந்தியும் புரியாமல், அந்த மாணவர்கள் அந்த மாநிலத்தின் மொழியும் புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தேர்வு மையத்திற்கு நேரத்திற்குள் சென்றடைவர். இதனை கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் திட்டம் தீட்டி செயல்படுத்துவது போல் தான் தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் தான் கேள்வித்தாள்கள் இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. 13 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கு 66000 மருத்துவ இடங்களை மட்டும் தான் நிரப்ப வேண்டும். இந்த வருடம் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு 12 மையங்கள் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பதே சர்ச்சைக்குரியது. தமிழகம் என்ன கல்வியில் அவ்வளவு பின் தங்கிய மாநிலமா? சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர் நாமக்கல், நெல்லை, திருவள்ளூர், காஞ்சிபுரம் இத்துடன் தெலுங்கானாவில் 2 மையங்கள் என ஒதுக்கப்பட்டது. இதனால் பல மாணவர்கள் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீட் தேர்வுக்குழு
நீட் தேர்வினை நடத்தும் தேர்வுக்குழுவில் செயல்படும் அதிகாரிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேர்வினை நடத்துவதற்கு வழிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், சரியாகத் தான் வகுத்துள்ளனரா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்னப்பித்து தெரிந்து கொண்டு, பின் இந்த பிரச்சனையை அனுக வேண்டும். சமூக ஆர்வலரோ அல்லது பாதிக்கப்பட்டவரோ எவ்வளவு முறை முறையிட்டாலும் நீதி கிடைக்காத வண்ணம் நிகழ்வுகள் நடப்பதற்கு சட்டத்தில் இருக்கும் தெளிவின்மை மட்டுமே காரணம் என்று நாம் ஓய்ந்துவிட்டால் அது சரியாகாது. சில நேரங்களில் நீதி மன்றங்களில் முறையிடும் போதும் நாம் தெளிவாகத் தான் அனுகுகிறோமா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
கல்வி கண் திறந்த காமராசர் பிறந்த மண் இந்த தமிழகம். ஏழை எளியோராக இருந்தாலும் சரி, எல்லாம் படைத்தவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் கல்வி சென்றடைந்தால் தானே நாடு முன்னேறும் என்று எண்ணி கல்விக்காக பாடுபட்ட தலைவர் அவர். இப்படி கல்விக்காக ஏங்கி மாணவர்கள் மறித்துபோவதற்காகவா அவர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும், கல்லூரிகளில் காலை நேர வகுப்பு மற்றும் மாலை நேர வகுப்பு என்று இரண்டு கால அட்டவணையிட்டு, அனைவரும் படிப்பதற்கு வழிவகுத்தார். நான் இதனையெல்லாம் இன்று இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
இந்த வருடம் நீட் தேர்வு எழுதும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வேரு மாதிரியான பிரச்சனை. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு தேர்வுக்குழுவின் அலட்சியம் காரணமா? இல்லை இது சதியா? இதை இந்தி திணிப்புக்கு வித்திடும் சூழ்ச்சியாகத் தான் நான் பார்க்கிறேன். திரு. காளிமுத்து மயிலவன் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்கள், தமிழகத்திற்குள்ளே எழுத அனுமதி அளிக்குமாறு அளித்த தீர்ப்புக்கு ஒத்துழைக்காமல் சி.பி.எஸ்.இ இந்த விஷயத்தில் மனிதாபிமானம் இன்றி எப்போது உச்ச நீதிமன்றத்தை அனுகியதோ. அதிலேயே ஒரு உண்மை தெரிகிறது. எப்படியாவது கணக்கிற்காக நாம் வேலை செய்தால் போதும் என்று வேலை செய்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
எந்த விடயங்களை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற நீதியரசர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் வேறு மாநிலமாக இருந்தாலும் அங்கு தான் சென்று தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார் என்று தெரிய்வில்லை. தமிழக மாணவர்களுக்கு இராஜஸ்தானில் தேர்வு மையம் நியமித்த தகவல் அந்த நீதியரசருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட தீர்ப்பளிக்காததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நாங்கள் இந்த மத்திய அரசும், அதனை சார்ந்த நிர்வாகமும் தமிழர்களை வதைக்கும் வண்ணம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சும்மா காரணம் இல்லாமல் பினாத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடன் ஒரு கேள்வி. எங்களது தமிழக மாணவ மாணிவியருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் நியமித்தது போல் வேறு எந்த மாநிலத்திலாவது எந்த மாணவருக்காவது வேறு மாநிலத்தில் தேர்வு மையம் நியமிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்றால் எங்கள் பினாத்தல் உண்மை தான் என நாங்கள் கருதுவோம். இதில் இருக்கும் சூழ்ச்சி உங்களுக்கும் புரியும் தருணமாக இது இருக்கும் என்று நம்புகிறோம். தமிழக மாணவர்களுக்கு மட்டுமே இத்தகைய சோதனைகள் வருகிறதே? அரசாங்கம் என்பது அப்பாவி மக்களுக்கா இல்லை அதிகாரக் கூட்டத்திற்கா?
சமயங்களில் உணர்ச்சிவயப்பட்டு இப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டிய சூழலை சிலரது அலட்சியம் ஏற்படுத்துகிறது. அந்த சிலர் என்கிற வரம்புக்குள் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் அடங்குவார் என்பதை குறிப்பிட என் பேனாமுனைக்கே கூசுகிறது. இந்த பிரச்சனையைப் பற்றி ஊடகங்கள் தமிழ்நாட்டின் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்கையில் இதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க எனக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூச்சம் குற்ற உணர்வு, பொருப்பு என்று எதுவுமே இல்லாமல் கூறிவிட்டார். அவர் பத்திரிக்கையாளரிடம் அந்த பதிலைக் கூறும் காணொலியைப் பார்த்தேன், அதில் அவரது உடல்மொழியில் தயக்கமும் குற்ற உணர்வும் துளி கூட இல்லை. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதித்த நாள் முதலே தமிழக அரசு கோமா நிலைக்கு தள்ளப்பட்டது இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கேலி செய்யும் அளவிற்கு தான் மாநில அமைச்சர்களின் நடவடிக்கைகள் இருந்தது. அவ்வப்போது செங்கோட்டையன் பள்ளிக்கல்வி தொடர்பாக எடுக்கின்ற நடவடிக்கைகள் நம்பிக்கை தரும் வண்ணம் அமைந்தது. ஆனால் இந்த விடயத்தில் அவரும் கை விரித்துவிட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. ஏன் சி.பி.எஸ்.இ இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறக்கூடவா ஒரு மாநில அமைச்சருக்கு திராணி இல்லை.
சில விடயங்களை கோர்த்துப் பார்த்தால் இது அலட்சியமாக நடந்த ஒன்றாகவும் தெரியவில்லை. நிச்சயம் சதி இருக்கின்றது என்பது போல் தான் தோன்றுகிறது. குறிப்பாக ஒன்று, அது ஏன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்திருக்கும் மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் தான் இதிலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நான் தேவையில்லாமல் பின்னுவது போலத் தெரிந்தால் இதனை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் தான் என் யூகம் தவறு என்று குறிப்பிடுங்களேன் பார்க்கலாம். இந்தியாவிலேயே இது தான் முதன் முதலாக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வா என்ன?
தேசிய அளவிலான தேர்வுகள்
UPSC,AIEEE போன்ற பல தேர்வுகளை எந்த சர்ச்சையும் இல்லாமல் நடத்தின நிர்வாகத் திட்டமிடல் ஏன் நீட்டில் மட்டும் செல்லுபடி ஆகவில்லை? இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போகலாம் , ஆனால் இவர்கள் தான் முதல் கேள்விக்கே பதில் அளிக்கவில்லையே. பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பது போல கல்வி சார்ந்த மரபுகளையும் மாணவர்கள் நலன் கருதி மாற்றியமைக்காமல் இருப்பது நன்று. ஒன்று மட்டும் உறுதி, இந்த பிரச்சனையை யார் கையில் எடுக்கின்றீர்களோ, அவர்களிடம் ஒரு வேண்டுகோள், இந்த வருடம் நிச்சயம் தேர்வு நடைபெறுவதற்குள் பெரிய சர்ச்சைகள் எழும்பி பின் நிர்மலா பிரச்சனை போல ஏதாவது ஒன்று மக்களை திசைத் திருப்பிவிடும்.
ஆனால் அதனை கிடப்பில் போட்டு விடாமல் அடுத்த வருடம் நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு வருவதற்குள் நீட் தேர்வில் உள்ள அனைத்து அடிப்படை குழப்பங்களையும் களையும் வண்ணம் உங்களது சட்டப் போராட்டம் தெளிவான ஒன்றாகவும், திடமான ஒன்றாகவும் இருத்தல் வேண்டும். இந்த வருடமும் அனிதாவை போன்று எந்த மாணவரும் மனமுடைந்து எந்த தவறான முடிவையும் எடுத்துவிடாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், விழித்திருந்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த வருடம் நீர் தேர்வு எழுத இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Web Title: Neet Exam Centres Beyond Borders
Featured Image Credit: clicklancashire