இலங்கையில் Backpackers செல்லக்கூடிய 5 மலைகள்

இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு மலைப்பிரதேசங்களுக்கு நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ சென்று முகாமிட்டுத் தங்கி, இயற்கையின் அழகில் திளைக்க நினைப்போர் ஏராளம். இவர்களை Backpackers என்பர். அப்படி மலைஏற விரும்புவோருக்கு இலங்கையில் சில மலைப் பிரதேசங்கள் அவ்வாய்ப்பினையும் இயற்கை அழகினையும் குறைவின்றி வழங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் என மலைஏற விரும்புவோர்களை வெகுவாகக் கவர்ந்துவரும் இலங்கையின் 5 மலைப்பிரதேசங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.   

தொட்டுபொல கந்த 

தொட்டுபொல கந்த மலையில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியும் மலைக்கு செல்வோரும்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இம்மலையானது தொட்டுபொல கந்த அல்லது தொட்டுபொல பீக் என்ற அழைக்கப்படுகின்றது.  இது இலங்கையில் 3 வது உயரமான மலையாகும். நுவரரெலியா ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்கு செல்பவர்கள் அங்கு அமைந்துள்ள இம்மலைக்கு சென்று வர முடியும். கடல்மட்டத்தில் இருந்து 7,733 அடி உயரம் கொண்டது. எந்நேரமும் பனிமூட்டமும் குளிர்காற்றும் நிறைந்த இப்பகுதியானது மலைஏற விரும்பும் பயணப்பிரியங்களுக்கு சிறந்ததொரு அனுபவமாக அமையும் என்பது நிச்சயம். 

 லக்கேகல மலைக்குன்று  

 லக்கேகல மலைக்குன்றின் காட்சியும் முகாமிட்டிருக்கும் பயணிகளும்

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 175 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மீமுரே கிராமப்பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்று தான் லக்கேகல. மலைக்காடுகள், தோட்டங்கள் என சுற்றிலும் இயற்கையழகைக் கொண்டுள்ள இம்மலைக் குன்றானது கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை தன் எல்லையாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1310 மீட்டர் உயரமான இம்மலையானது  மலைஏறுபவர்கள் மற்றும் இயற்கை புகைப்படம் எடுபவர்களுக்கு மிகப் பொருத்தமான இடமாகும்.

எல்ல மலைஉச்சி 

பதுளையில் அமைத்துள்ள எல்ல மலைஉச்சி 

இலங்கையர்களைப் பொறுத்தவரை மலைஏறுதல் என்றாலே முதலில் நியாபகம் வரும் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ராவணன் எல்ல என்ற Ella rock தான். காரணம் குளிர்,பனி,நீர்வீழ்ச்சிகள்,ஏரிகள் மற்றும் சின்ன சின்ன சாகச விளையாட்டுகள் என அனைவரையும் கவரும் அழகானதொரு இடமாகும். உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக ஈர்க்குமொரு இடமும் கூட. இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இம்மலையானது கடல்மட்டத்தில் இருந்து 3415 அடி உயரம் கொண்டது. சுற்றிலும் மலைகள்,காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் ரயில் பாதைகள் என காண்பவரை கண்கவர்ந்து வருகின்றது இம்மலைப் பிரதேசம். மாதம், நேரம், மற்றும் காலநிலைப் பொறுத்து இங்கு பயணம் செய்வோர்கள் நல்லதொரு அனுபவத்துடன் திரும்பி வரலாம் என்பது மட்டும் நிச்சயம்.    

கிரிகல்பொத்த 

கிரிகல்பொத்த மலை ஏறிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிகல்பொத்த மலையானது இலங்கையின் இரண்டாவது உயரமான மலையாகும். நுவரெலியா ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இருந்து சுமார் 7  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது கிட்டத்தட்ட 7800 அடி உயரமாகும். இதன் அடிவாரத்தை அடைவதற்கு ஓட்டன் சமவெளியினூடாக சென்று அருகிலுள்ளதொரு காட்டுப்பாதையினூடாக சதுப்புநிலங்களை கடந்து செல்ல வேண்டும். இதுவே மலை பயண விரும்பிகளுக்கு சிறந்த அனுபவமாக அமையும். மேலும் காட்டுப்பாதையில் இம்மலை உச்சிக்கு பயணித்தல் என்பது கூடுதல் குதூகலம். இங்கு தை, மாசி மற்றும் ஆடி, ஆணி மாதங்களில் செல்வது சிறந்ததாகும். மழைக்காலங்களில் இம்மலை ஏறுவதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுவதோடு இங்கு செல்வதற்கு முன்னர் ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அனுமதி பெறுவதுவும் அவசியமாகும். 

நக்கிள்ஸ் மலைத்தொடர்

நக்கிள்ஸ் மலைத்தொடரின் காட்சி

இலங்கையின் மிக அழகிய மலைத்தொடர்களில் ஒன்றான நக்கிள்ஸ் மலைத்தொடரானது  கண்டி மற்றும் மாத்தளை ஆகிய இரு மாவட்டங்களிலும் அமைந்துள்ளதொரு மலைத்தொடராகும். இது தெற்கிலும் கிழக்கிலும் மகாவலிப் பள்ளத்தாக்கினாலும் மேற்கில் மாத்தளைப் பள்ளத்தாக்கினாலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்து பிரிக்கப்படுகிறது. கைகளை இறுக்கப்பொத்தியது போன்று காட்சியளிப்பதால்  பிரித்தானிய நிலவரைபடவியலாளர்களால் நக்கிள்ஸ் எனப் பெயரிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. அதேபோல் இலங்கையின் சிங்கள மக்களால் ”தும்பர கந்துவெட்டிய” என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு தமிழில் பனிசூழ் மலைத்தொடர் என்று பொருளாகும். அதிகமான காடுகளைக் கொண்ட இம்மலைத்தொடரானது இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.03% அளவை கொண்டிருப்பதோடு  இலங்கையின் மிகக் கூடிய உயிர்ப் பல்வகைமையைக் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது. மலைஏறுபவர்கள் மற்றும் புகைப்படப் பிரியர்களுக்கு மிகப்பொருத்தமான இடமாக விளங்கும் இங்கு, காலநிலை பொறுத்து பயணம் செய்வது மிக அவசியமாகும்.

இவை தவிர மேலும் பல மலைக்குன்றுகள் இலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ பகுதிகளை சுற்றி காணப்படுகிறது. அவை குறித்து வேறு ஒரு கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

முகப்புப்பட உதவி : peacock hills - The Weekend Trekkers

Related Articles

Exit mobile version