கரிகால சோழனும் தமிழர்களின் கடல் கடந்த பன்னாட்டு வாணிகமும்.

சங்க காலத்தை சேர்ந்த சோழ மன்னர்களில் சிறப்பு மிக்க மன்னன் தான் கரிகால சோழன். இவருக்கு இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தில் கால் கருகியதால் இவரை அனைவரும் கரிகால சோழன் என்று அழைத்ததாக வரலாற்று கூற்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு பின்னர் அவர் வடமொழி செல்வாக்கை பெற்ற போது யானைகளின்(எதிரிகளின்) யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. கரிகாலன் எதிரிகளின் சிறைக்குள் இருந்தே தன்னை வல்லவனாக மாற்றிக்கொண்டார். கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்து சிந்தித்து சீரிய முடிவுகளுக்கு பின் சிறைகாவலனை கொன்று சிறையில் இருந்து தப்பி பிறகு படிப்படியாக பேரும் புகழும் அடைந்தான். இவனின் தந்தை இளஞ்செட்சென்னி ஆவார். அழகான தேரினை கொண்ட இளஞ்செட்சென்னியின் மகன் தான் கரிகாலன்.  கரிகால சோழனின் புனைப்பெயர் திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் ஆகும். கரிகாலன் சோழகுலத்தை குருநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால சோழக்குலத்தை தன் முன்னோர்கள் ஆண்ட பகுதியிலிருந்து விரிவுபடுத்தினான். பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்கள் இவரைப் பற்றிய சில குறிப்புகள் கொடுக்கின்றன. இதில் பட்டினப்பாலை கூறும் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

” திருமாவளவன்

தெவ்வர்க்கு ஓங்கிய

வேலினும் வெய்ய கானம்;

அவன், கோலினும் தண்ணிய

தடம்மெல் தோளே.

முட்டாச் சிறப்பின்

பட்டினம் பெறினும்

வாரிரும் கூந்தல்

வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய செஞ்சே.”

இந்த பாடல் பட்டினப்பாலை செய்யுளாகும். இதில் கரிகால சோழனின் பெருமை,வீரம்,கொடை முதலியவற்றை எடுத்துரைக்கிறது. காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு போன்றவற்றை இந்தநூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; அவைகளைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்த நூலிலே காணலாம்.

போரில் கரிகாலன் (படம்:http://www.indiancontents.com/2017/07/battle-of-venni.html indian contents.com)

சோழ அரியணையை நிலையாக தக்க வைத்துக்கொள்ள உதவும் விதமாகவும் தமிழகத்தின் முடியுடைய மூவேந்தருக்கு தலைவனாக விளங்குமாறு செய்ததும் இவர் ஆட்சி காலத்தில் தோன்றிய முதல் பெரும் போர் வெண்ணி போரே. ஏனென்றால் இந்த போரின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை வீழ்த்தி வெற்றி கண்டார். இப்போரில் தோல்வியுற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதி வடகிருந்து உயிர்நீத்தார். வெண்ணிய போரை கண்ட கரிகாலனின் நண்பனும் புறநானூறு பாடிய புலவருமான வெண்ணிக் குயத்தியார் தன் புறநானூற்றில் இதை பற்றி கூறியுள்ளார்.

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்திப்,

புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

கரிகாலனின்  படைபலத்தை பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகவில்லை. வாகை பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவர் தோற்கடித்தார். கரிகாலனின் படைகள் மற்றும் அவரது பகைவர்களின் இராச்சியங்களையும் அழித்த விவரங்களையும் அவர் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கை கதைப்பற்றி பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. அவர் பெண்டிரடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்தார் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தார் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தனது காலத்தில் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா சில செய்யுள்கள் பாடியுள்ளார்.

உலகில் பழமை வாய்ந்த ஒரே அணை கல்லணை தான். இதை கட்டிய பெருமைக்குரிய மன்னர் கரிகால சோழன் தான். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவிரி என்று அறியப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என்று நான்காக பிரிக்கிறது. கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய அணை தான் கல்லணை. தற்போது புழக்கத்தில் உள்ள பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிக பழமையான நீர்ப்பாசனத் திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இது என்பது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.

கரிகாலன் கட்டிய கல்லணை (படம்: தமிழ்தாசன்)

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டும் இணைந்த ஒரு அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அற்புதமான படைப்பே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இந்த அணையை வந்து பார்த்து செல்தால், இது ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதை தடுக்கும் பொருட்டு ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளை கொண்டுவந்து போட்டனர். அந்த பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்திய தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகள் கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்கள் கட்டுப்பாட்டு திறனை பறை சாற்றி கொண்டிருக்கின்றது.

(படம்: பனித்துளி)

பழமை வாய்ந்த இந்த அணை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றி பல புராணக் கதைகள் உருவாகி, இப்போது, ​​இக்கதையே வரலாறாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றார் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்படோ செய்துக்கொண்டார். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினார் என்று ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ (ட) மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

கரிகால சோழன் நினைவகம் (படம்:wikipedia)

கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்று தெரிகிறது. குராப்பள்ளி ‘குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாக கருதப்படுகிறது. வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவர் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தை பற்றியும் கருங்குழல் ஆதனார் என்ற புலவர் பாடியுள்ளார். பொருநராற்றுப்படை என்ற ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

 

Reference:

Related Articles

Exit mobile version